புதுடில்லி: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு, குழாய் வழியாக, 'காஸ்' வினியோகிக்கும் திட்டத்தை, 3,000 கோடி ரூபாய் செலவில், பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
'ஒரே நாடு; ஒரே எரிவாயு' கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 3,000 கோடி ரூபாய் செலவில், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு, 450 கி.மீ., துாரத்துக்கு, குழாய் வழியாக, 'காஸ்' எனப்படும், இயற்கை எரிவாயுவை வினியோகிக்கும் திட்டத்தை, 'கெயில்' நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
எதிர்ப்பு
கொச்சியிலிருந்து, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை கடந்து செல்லும். இத்திட்டத்தின் துவக்க விழா, 2009ம் ஆண்டில் நடந்தது. எனினும், 2014ம் ஆண்டில், மோடி பிரதமரான பின் தான் வேகமெடுத்தது.
பாதுகாப்பாக செயல்படுத்துவது, வர்த்தக ரீதியாக வெற்றி பெற முடியமா என்ற சந்தேகம், கூடுதல் விலை கொடுத்து, நிலம் கொள்முதல் உட்பட பல்வேறு பிரச்னைகள், எதிர்ப்புகளை கடந்து, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: குழாய் வழி இயற்கை எரிவாயு திட்டத்தால், கேரளா, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரு மாநில மக்களுக்கும், இன்றைய தினம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.இந்த குழாய் வழி எரிவாயு திட்டம், இரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியில், ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த திட்டம், இரு மாநில மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதோடு, இரு மாநிலங்களிலும் உள்ள ஏழை, நடுத்தர மக்கள், தொழில் முனைவோரின் செலவுகளை குறைக்கும்.
தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு, எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை அதிவேகமாக விரிவுபடுத்துவது மிகவும் அவசியம். அதனால் தான், ஒரே நாடு; ஒரே எரிவாயு திட்டத்துக்கு, அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.
சூரிய மின்சக்தி
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், உரத் தொழிற்சாலை, பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் மின்சார உற்பத்திக்கு உதவியாக அமையும். அத்துடன், நாட்டின் அன்னிய செலாவணியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை, இந்தியா மிச்சப்படுத்தவும் முடியும்.மத்தியில், 2014-ம் ஆண்டு, தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின், எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் மற்றும் உற்பத்தி, இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதல் மற்றும் வினியோகம் என, எண்ணெய், எரிவாயு துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில், இயற்கை எரிவாயுவின் பங்களிப்பை, 6 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாக அதிகரிக்க, கொள்கை ரீதியாக பல்வேறு முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. கெயில் நிறுவனத்தின் கொச்சி - மங்களூரு குழாய் வழி இயற்கை எரிவாயு திட்டம் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது, ஒரே நாடு; ஒரே எரிவாயு தொகுப்பு என்ற குறிக்கோளை நோக்கிய
பயணத்தின் ஒரு பகுதி.எரிசக்தி ஆதாரங்களை வலுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. குஜராத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா போன்ற கடலோர மாநிலங்களிலும், பிற தென் மாநிலங்களிலும், நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்த, விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்சார்பு இந்தியாவிற்கான முக்கிய ஆதாரமாக, நீலப் பொருளாதாரம் அமையும். துறைமுகங்கள் மற்றும் கடலோர சாலைகளை, பல்வகை போக்குவரத்து இணைப்பு கொண்டவையாக மாற்றவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல்சார் வளங்களை மட்டும் நம்பியிருப்பவர்களாக மட்டுமின்றி, கடலோரப் பகுதிகளின் பாதுகாவலர்களாகவும், மீனவ சமூகத்தினர் உள்ளனர். இதற்காக, கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
கேரள முதல்வர் மகிழ்ச்சி
விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:இந்த திட்டம், பல்வேறு தடைகளை சந்தித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என, 2016 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தோம். ஒரு கட்டத்தில், இந்த திட்டத்தை நிறுத்த, கெயில் நிறுவன அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், மாநில அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள், நடவடிக்கைகளால், இந்த திட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE