சென்னை:இறந்தவர்களின் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரிய மனுவை, இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிற்றரசு தாக்கல் செய்த மனு:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்காக, சென்னையில், 716 ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன. வாக்காளர் இறந்திருந்தால், அவரது பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். ஆனால், இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.
எங்கள் கட்சி நிர்வாகிகள், ஆட்சேபனை மனுக்களை அளித்தும், அவற்றை பெற்றுக் கொள்ள வில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்த, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இது குறித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து வந்தோம். ஆளும் கட்சிக்கு சாதகமாக, அதிகாரிகள் செயல்படுகின்றனர்.எனவே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன், வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, முறையான கள ஆய்வு செய்து, சரி செய்யும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து வரும் நிலையில், முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'இறுதி பட்டியல் வெளியிடும் முன், இறந்தவர்களின் பெயர் நீக்கப்படும்' என்றார்.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும் படி, தேர்தல் ஆணையத்துக்கு, நீதிபதிகள் உத்தர விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE