வாஷிங்டன்:''அதிபர் பதவியை விடமாட்டேன்; கடைசி வரை போராடுவேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் முரண்டு பிடித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், கடந்தாண்டு, நவ., 3ல் நடந்தது. இதில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளை ஏற்க, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப், தொடர்ந்து மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, மாகாண நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. உச்ச நீதிமன்றமும், டிரம்பின் மனுக்களை நிராகரித்தது.'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாண பிரதிநிதிகள் ஓட்டளித்து, அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வென்றதாக அறிவித்தனர். அதை உறுதி செய்வதற்காக, பார்லிமென்டின் கூட்டுக் கூட்டம் இன்று நடக்க உள்ளது. துணை அதிபர் மைக் பென்ஸ், அதிபர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டும்.
இந்நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில், செனட் எம்.பி.,க்கான தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப் பேசியதாவது:அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது. அதிபர் பதவியை விடமாட்டேன். அனைத்து வகையிலும் போராடுவேன். எலக்டோரல் காலேஜ் ஓட்டளித்து விட்டால், பைடன் வென்றதாக ஆகிவிடுமா? அவரை வெள்ளை மாளிகைக்குள் நுழைய விடமாட்டேன்.
பார்லி.,யின் கூட்டுக் கூட்டத்தில், அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என, குடியரசு கட்சியினர் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டுக் கூட்டத்தில், தேர்தல் முடிவுகளை எதிர்க்கவும், விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தவும், டிரம்ப் ஆதரவு எம்.பி.,க்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உட்பட பலர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டிரம்பின் முயற்சிக்கு, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜோ பைடன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:பதவி விலகுபவர், கடைசி நாள் வரை, தங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, தேவையில்லாத செயல்களில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய பணியை ஒழுங்காக செய்யாதவர், எதற்கு அந்தப் பதவியை கேட்கிறார் என்பது புரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
அதிபர் தேர்தல் முடிவுகளை, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம் உறுதி செய்ய உள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சி போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதால், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE