ஆந்திராவில் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் வேடிக்கை பார்க்கிறார் முதல்வர் ஜெகன்மோகன்?

Added : ஜன 05, 2021
Share
Advertisement
அமராவதி:ஆந்திராவில், சமீப காலமாக ஹிந்து கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளை, இரவோடு இரவாக உடைத்து சேதப்படுத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத மாற்றத்தை துாண்டி வருவதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது புகார்கள் கூறப்படும் நிலையில், கோவில் சிலை உடைப்புகளை, அவர் வேடிக்கை பார்த்து

அமராவதி:ஆந்திராவில், சமீப காலமாக ஹிந்து கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து உள்ளது.

கோவில்களில் உள்ள சிலைகளை, இரவோடு இரவாக உடைத்து சேதப்படுத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத மாற்றத்தை துாண்டி வருவதாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது புகார்கள் கூறப்படும் நிலையில், கோவில் சிலை உடைப்புகளை, அவர் வேடிக்கை பார்த்து வருவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிஉள்ளன.


குற்றச்சாட்டுகள்

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், மத மாற்ற நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதற்கு வலுசேர்க்கும் வகையில், மாநிலத்தில் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன.

பிதாபுரம், கொண்ட பிட்ரகுண்டா, அந்தர்வேதி கோவில்கள் சூறையாடப்பட்டன.அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோவிலின் பழமையான தேரை, விஷமிகள் சிலர் எரித்தனர். கடந்த, 19 மாதங்களில், 127க்கும் அதிகமான ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயநகரில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்த கோவில் உள்ளது. சமீபத்தில், விஷமிகள் சிலர், இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று, அருகில் உள்ள வயல் வெளியில் வீசிச் சென்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என, இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், ராஜமுந்திரி மாவட்டத்தில், விக்னேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமி சிலையை, விஷமிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளது, தெரிய வந்துள்ளது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஆறு கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.


கடும் கண்டனம்தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் உள்ள ஹிந்து சிலைகளை பாதுகாக்கும்படியும், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்; அவர்களை ஜெகன்மோகன் அரசு கைது செய்தது.கோவில்கள் மீது தொடரும் தாக்குதலுக்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கிறிஸ்துவ மத மாற்றத்தை, ஜெகன்மோகன் துாண்டி வருவதாக குற்றம் சாட்டிஉள்ளன. இது பற்றி, ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறியதாவது:ஜெகன்மோகனின் தந்தை, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதல்வராக இருந்தபோது, கிறிஸ்தவ மத மாற்ற நடவடிக்கைகள் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரான பின், மீண்டும் மாநிலத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் பகிரங்கமாக நடக்கின்றன.

பல இலவச திட்டங்களை அறிவித்து, மாநிலத்தின் கஜானாவை, ஜெகன்மோகன் ரெட்டி காலி செய்துவிட்டார். இந்த இலவச திட்டங்கள், கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், ஹிந்துக்களை, கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. ஜெருசலேத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும், ஆண்டு வருமானம், மூன்று லட்ச ரூபாய்க்குள் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை, 40 ஆயிரம் ரூபாயிலிருந்து, 60 ஆயிரம் ரூபாயாக, ஜெகன்மோகன் அரசு உயர்த்தி உள்ளது.

மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில், கிறிஸ்தவ மத பிரசாரகர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, ஆந்திர அரசு அறிவித்தது. கடந்த, 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆந்திர மக்கள் தொகையில், கிறிஸ்தவர்கள் சதவீதம், 1.4 ஆக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.

ஆந்திராவைச் சேர்ந்த, பா.ஜ., தலைவர் சந்திர மோகன் கூறியதாவது:ஆந்திர அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தும், கிறிஸ்தவ மத மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் உள்ளன.முதல்வர் ஜெகன்மோகனின் பல அறிவிப்புகள், திட்டங்கள் அனைத்தும், ஹிந்துக்களுக்கு விரோதமாகவே உள்ளன.இதை தடுக்காவிட்டால், ஆந்திராவில், பெரும்பான்மையினர் - சிறுபான்மையினர் இடையே பெரும் மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும்.

ஹிந்து கோவில்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்கவோ, அதில் ஈடுபடுவோர்களை கைது செய்யவோ, முதல்வர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. தாக்குதலை கண்டிக்கவும், அவருக்கு மனமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் அறிவியல் கல்லுாரியில் பேராசிரியராக, 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய, டாக்டர் கவுதம் சென், இந்த விவகாரம் பற்றி கூறியதாவது:கிறிஸ்தவர்களாக மதம் மாறுபவர்களிடம், அதை வெளியே தெரியாமல் மறைக்கும்படி, சர்ச்கள் வலியுறுத்துகின்றன. இதனால், மத மாற்றத்தை எளிதாக மேற்கொள்ளலாம் என, அவர்கள் நம்புகின்றனர். அதனால்தான், ஆந்திராவில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பலர், தங்களது முந்தைய ஹிந்து பெயர்களிலேயே நீடிக்கின்றனர்.

ஆந்திராவில் குறிப்பிட்ட பகுதிகளில், மத மாற்றம் தீவிரமாக நடக்கிறது. கடலோர பகுதிகளில் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.அங்குள்ள மக்கள், கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யப்படுகின்றனர். இதற்காக, இவர்களுக்கு அதிகளவில் பணம் தரப்படுவதுடன், பல்வேறு உதவிகளும் செய்யப்படுகின்றன. இதற்கு, ஆந்திர அரசு உறுதுணையாக உள்ளது.

இந்த விவகாரத்தில், தந்தை ராஜசேகர ரெட்டியைவிட, ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக உள்ளார். ஆந்திராவில் சமீபகலாமாக சர்ச்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஹிந்துக்கள் அதிகமுள்ள கிராமங்களில், கோவில்களை விட, சர்ச்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தால், வடகிழக்கு மாநிலங்களை போல், ஆந்திரா செயல்படும் அபாயம் உள்ளது. ஆந்திராவில், சினிமா பிரபலங்கள் உட்பட பலர், சமீபத்தில் கிறிஸ்தவ மதத்தக்கு மாறியுள்ளனர்.அதனால், இதை இப்போதே தடுக்க வேண்டும். இல்லாவிடில் பெரும் பிரச்னைகள் வெடிக்கும்; இது, பெரும் கலவரமாக மாறும் அபாயம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

'கோவில்களை காப்பாற்றுங்கள்'ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். இதையடுத்து, ஆந்திராவில் உள்ள கோவில்களை காப்பாற்றும்படி, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், '#save temples in ap' என்னும், 'ஹேஷ்டேக்' டுவிட்டரில், 'டிரெண்ட்' ஆனது. இந்த ஹேஷ்டேக் மூலமாக, 1.41 லட்சத்துக்கும் அதிகமானோர், ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றும்படி குரல் கொடுத்துள்ளனர்.


எதிர்க்கட்சிகள் கண்டனம்ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது:ஆந்திராவில், கடந்த, 19 மாதங்களில், ஹிந்து கோவில்கள் மீது, 120 தாக்குதல்கள் நடந்துள்ளன. தாக்குதலை கண்டிக்கவோ, சேதப்படுத்தியோரை கைது செய்யவோ உத்தரவிடாமல், முதல்வர் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது.இவ்வாறு, அவர் கூறினார்.

பிரபல தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான, பவன் கல்யாண் கூறுகையில், ''ஜெகன் மோகன் ஆட்சியில், பிதாபுரம், கொண்ட பிட்ரகுண்டா, அந்தர்வேதி கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X