புதுடில்லி:பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், இம்மாதம், 29ம் தேதியில் இருந்து, ஏப்., 8 வரை, இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது.வரும், பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது; இதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ரத்து செய்யப்பட்டது. அப்போது, 'பட்ஜெட் கூட்டத் தொடர் வழக்கம் போல் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நடந்தது. அதில், பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதன்படி, ஜன., 29 முதல், ஏப்., 8 வரை, இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஜன., 29 முதல், பிப்., 15 வரையிலும், இரண்டாம் கட்டமாக, மார்ச் 8 முதல், ஏப்., 8 வரையிலும் கூட்டத் தொடரை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், முதல் நாளில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். பிப்., 1ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். விரைவில் முறைப்படி தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE