தர்மபுரி :''எம்.ஜி.ஆர்., போட்ட இரட்டை இலையில், இன்று இருவர் அமர்ந்துள்ளனர். இவர்கள் அடித்துக் கொள்வதில், நாற்காலி இரண்டாக உடையும்; கூட்டணி மாறும்,'' என, தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
அவர் பேசியதாவது:
உலகம் கண்டு வியக்கும் சுற்றுலா தலமாக, தர்மபுரி மாற வேண்டும். நான் என்னை, உங்களுக்கு ஒரு கருவியாகத் தான் பார்க்கிறேன்; தலைவனாக இல்லை. தமிழகம் சீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான், இங்கு வந்துள்ளோம். இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழகம் இருக்கும். அதற்கு உங்கள் பங்கு இருக்கட்டும்.
எம்.ஜி.ஆர்., போட்ட இலையில் இன்று, இருவர் சாப்பிட்டு கொண்டுள்ளனர். இரண்டு இலை உள்ளதால், இருவர் உட்கார்ந்துள்ளனர். இவர்கள் அடித்துக் கொள்ளட்டும், நமக்கு வேலை உள்ளது. அவர்கள் நாற்காலி கைப்பிடியை உடைக்கத் தான் போகின்றனர். நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள். அதனால் தான் சொன்னேன். சில கூட்டுகள் உடையும்; கூட்டணி மாறும்.
அன்று சொல்கிறேன், எங்கள் கூட்டணி யாருடன் என்று. எங்கள் கூட்டணி மக்களுடன் தான். நீங்களும் எங்களை தாங்கி பிடியுங்கள். நாளை நமதாகும்; வெற்றியும் நமதாகும். ஊழல் செய்ய பல வழி, அதில் எட்டு வழி சாலையும் ஒரு வழி.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, அன்னசாகரத்தில், சுதந்திர போராட்ட வீராங்கனை சிவகாமி அம்மாவை, அவரது இல்லத்தில் கமல் சந்தித்து ஆசி பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE