சென்னை:மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, திட்டம் வகுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனு: கடந்த, 2015ம் ஆண்டில், சென்னையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; சென்னை நகரம் முழுமைக்கும் போதிய அளவு தண்ணீர் இருந்தது. இரண்டே ஆண்டுகளில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம், தண்ணீரை சேமித்து வைக்காதது தான். நிலத்தடி நீர் பெருகும் வகையில், மிஞ்சிய தண்ணீரை சேமித்து வைக்க வழிமுறைகள் இல்லை.
இயற்கை வளமான தண்ணீரை, முறையாக பயன்படுத்த வேண்டும்.கடலில் கலக்கவிடக் கூடாது. முறையான நீர் மேலாண்மை இல்லாததால், தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கோவில் குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்கலாம். சென்னையில் மட்டும், 39 குளங்கள், தலா, 4.5 மீட்டர் ஆழத்தில் உள்ளன. அதேபோல், கடலில் கலக்கும் தண்ணீரை, சிறிய, பெரிய குளங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு திருப்பி விடலாம்.
எனவே, உபரி தண்ணீரை கடலில் கலக்கவிடாமல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் பயன்படுத்த, திட்டம் வகுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, 15 நாட்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE