கோவை:கோவை, பீளமேடு - சவுரிபாளையம் வரை, 40 அடி திட்ட சாலை உருவாக்க, நிலம் கையகப்படுத்த உள்ள நில உரிமையாளர்களுடன், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆலோசனை செய்தனர்.கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உள்ளூர் திட்ட குழுமத்திடம் இருந்து ரூ.80.27 கோடி நிதி பெற்று, ஆறு சாலைகள் விரிவுபடுத்தப்படும் என, கடந்த மார்ச், 31ல் தாக்கல் செய்த, மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், பீளமேடு முதல் சவுரிபாளையம் வரையிலான, 40 அடி திட்ட சாலை மிக முக்கியமானது.இந்த ரோடு மிகவும் குறுகலாக இருக்கிறது. குறிப்பாக, மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்து, மாரியம்மன் கோவில் வரை, 250 மீட்டர் நீளத்துக்கு, 30 அடிக்கும் குறைவாக இருப்பதால், நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது. தீர்வு காண, பீளமேடு முதல் சவுரிபாளையம் தேர் வீதி வரை, 40 திட்ட சாலை உருவாக்கும் முயற்சியில், மாநகராட்சி இறங்கியுள்ளது.இதற்காக, நிலம் கையகப்படுத்த வேண்டியய பகுதிகளை, பீளமேட்டில் இருந்து ஒருங்கிணைந்த சுகாதார மையம் வரை; இம்மையத்தில் இருந்து மாரியம்மன் கோவில்; கோவிலில் இருந்து சவுரிபாளையம் தேர் வீதி பஸ் ஸ்டாப் வரை என, மூன்று பிரிவாக பிரித்துள்ளது.இந்த ரோட்டை மறுஅளவீடு செய்யும் பணி, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் முன்னிலையில் நேற்று நடந்தது; இன்றும் தொடர்கிறது. சுகாதார மையத்தில் இருந்து, மகாலட்சுமி கோவில் வரை, 51 பேருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்த, ரூ.5.10 கோடி கேட்டு, உள்ளூர் திட்ட குழுமத்துக்கு, கருத்துரு அனுப்பியுள்ளனர்.அடுத்த கட்டமாக, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது; நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நில உரிமையாளர்களின் கருத்துகளை, அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE