சென்னை:''தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக, ஆறு மாவட்டங்களில், 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, கொரோனா தடுப்பூசி சேமிப்பு அறையை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க, தமிழகம் முழுதும், 51 கிடங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், சேமிப்பு கிடங்குகளை தயார் நிலையில் வைக்க, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மாதிரிகள், மரபணு பரிசோதனைக்காக, மஹாராஷ்டிர மாநிலம், புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.அதில், 12 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அவர்களில், நான்கு பேருக்கு மரபணு உருமாறிய வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு, கிண்டி கிங் ஆய்வகத்தில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல், தமிழகத்திற்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பறவை காய்ச்சல் நேரடியாக கால்நடைக்கு பாதிக்கப்பட்டாலும், அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுகாதாரத் துறை சார்பில், ஆறு மாவட்ட எல்லைகளில், 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து, கால்நடைகள் வரும்போது, சோதனை நடத்தப்படும்.
மழை காலத்திற்கு பின், டெங்கு போன்ற காய்ச்சல் வராமல் தடுக்கவும், அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள, தனியார் ஓட்டல்களில் பரிசோதனை நடத்தியதில், 2.7 சதவீதத்துக்கு கீழ் தான், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்.
மக்கள் கூடும் இடங்களில், தொடர்ந்து, கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையற்ற பதற்றம் வேண்டாம்.வழிகாட்டு நெறிமுறைகளின் படிதான், திரையரங்குகள், 100 சதவீத இருக்கைகளோடு செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு வந்தால், வருவாய் துறையிடம் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE