சென்னை:தமிழகத்தில் உள்ள, தனியார் ஆய்வகங்களில், ஆர்.டி.பி.சி.ஆர்., எனப்படும், கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை, 1,200 ரூபாயாக தமிழக அரசு குறைத்துள்ளது.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அதிகப்படியான சோதனைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, 1.44 கோடி, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகளை அரசு மேற்கொண்டு உள்ளது. தினமும், 60 ஆயிரம் முதல், 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், 76 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும், 24 சதவீதம் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டண தொகை அதிகமாக இருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை, தமிழக அரசு குறைத்துள்ளது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விபரங்களை, தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அரசாணையில் வெளியிட்டுள்ளார்.
'பொது மக்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் விடுதிகளுக்கு சென்று மாதிரிகள் சேகரித்தால், கூடுதலாக, 300 ரூபாய் வசூலித்து கொள்ளலாம். 'முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சோதனை செய்பவர்களுக்கு, 2,500 ரூபாயில் இருந்து, 800 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE