மதுரை:'மினி கிளினிக்'குகளுக்கு நர்ஸ்களை அயல்பணி முறையில் நியமனம் மேற்கொள்ளும் அறிவிப்பிற்கு எதிரான வழக்கில், 'இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடரும்' என, தமிழக அரசு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உறுதியளித்தது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில், 2,000 மினி கிளினிக்குகள் துவங்க டிச., 5ல் அரசாணை வெளியானது. இதில் பணிபுரிய, 1,415 நர்ஸ்கள், 585 இதர ஊழியர்களை, தனியார் நிறுவன அயல்பணி - 'அவுட்சோர்சிங்' - முறையில் தேர்வு செய்ய, சுகாதார துறை டிச., 15ல் அறிவிப்பு வெளியிட்டது.
சிலருக்கு சலுகை காட்டும் மறைமுக செயல் திட்டத்துடன்,அயல்பணி நியமனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்காக்கும் பணியில், மூன்றாம் நபர் மூலம் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்வது, சட்டத்திற்கு எதிரானது.நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமன தேர்வு நடைமுறையை, அயல்பணி முறையில் மேற்கொள்ளும் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, 'பதில் மனு தாக்கல் செய்ய ஜன., 11 வரை அவகாசம் தேவை. அதுவரை, இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலை தொடரும்' என, உறுதியளித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 11க்கு ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE