காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால், 100க்கும் மேற்பட்ட ஏரிகள், பாலாறு மற்றும் செய்யாற்றில், வெள்ளம் ஓடியது. இதனால், விவசாயிகள், விவசாயப்பணிகளை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், மாவட்டம் முழுதும், பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, மழை பெய்தாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.அவ்வப்போது பெய்து வரும் மழையால், இந்த ஆண்டு விவசாயத்திற்கு, தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை, 8.00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில், காஞ்சிபுரம் - 2.3, உத்திரமேரூர் - 1.7, செம்பரம்பாக்கம் - 1.7, குன்றத்துாரில் - 1.5, வாலாஜாபாத் - 1.2, ஸ்ரீபெரும்புதுார் - 0.80 செ.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்புசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. தற்போது மழை பெய்து, ஏரியின் நீர்மட்டம், 24 அடியில், 23 எட்டியுள்ளது.
இதனால், ஏரியில் இருந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. நீர் வரத்து பொறுத்து, தண்ணீர் வெளியேற்றப்படும்.எனவே, செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறி செல்லும் கால்வாய் பகுதிகளான, சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்று இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும்.மேலும், உபரி நீர் திறந்து விடும்போது, கரையோரம் நின்று, பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக்கூடாது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE