பொன்னேரி : அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையால், விளை நிலங்களில் சாய்ந்ததுடன், மழை நீர் தேங்கி இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்கு, செப்டம்பர் மாத இறுதியில், நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றியத்தில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில், நெல் பயிரிடப்பட்டுள்ளன. நெற்பயிர்கள், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள், விளை நிலங்களில் சாய்ந்து உள்ளதுடன், மழை நீரும் தேங்கி இருக்கிறது.மழை நீர் வடிந்தவுடன் தான் அறுவடை செய்ய முடியும், அதற்குள் சாய்ந்த நெற்பயிர்கள் தண்ணீரில் முளைத்துவிடும். இதனால், எதிர்பார்த்த மகசூல் இருக்காது என்பதை எண்ணி, விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
அறுவடை நேரத்தில் மழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக, விவசாயிகள் விரக்தியுடன் தெரிவித்து உள்ளனர்.வழக்கமாக மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள், தற்போது எப்போது மழை நிற்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE