தேனி:பறவை காய்ச்சலை தடுக்க அரை வேக்காடு, பச்சை முட்டை சாப்பிட வேண்டாம் என, கால்நடை பராமரிப்பு துறை எச்சரித்து உள்ளது.
மஹாராஷ்டிரா, குஜராத், கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல், மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.தேனி மாவட்ட கால்நடை துறை சார்பில், கோழி வளர்ப்போர் சுகாதார முறைகளை கடைப்பிடிக்க ஆலோசனை வழங்கியுள்ளது.
அதில் கூறியிருப்ப தாவது:வீட்டில் வளர்க்கும் கோழிகள், வீட்டு எல்லையை விட்டு வெளியில் சென்று மேயாமலும், வெளியில் உள்ள கோழி, வாத்து, கொக்கு வீட்டு கோழிகளுக்கு அருகில் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.தீவனங்களை வேறு கோழிகள், பறவைகள் பகிர்ந்து கொள்ள விடக்கூடாது. தீவனம், தண்ணீர் தட்டுகளை வெளியில் வைக்க வேண்டாம்.
கோழி, வாத்து, வான்கோழி, கூஸ் வாத்து ஆகியவற்றை ஒன்றாக வளர்க்க வேண்டாம். சந்தையில் இருந்து கோழி வாங்கி வளர்க்க வேண்டாம். சேவல் சண்டை நடக்கும் இடங்களுக்கு, உங்கள் சேவல்களை கொண்டு செல்ல கூடாது.
அரை வேக்காடு பச்சை முட்டை சாப்பிடக் கூடாது. முழுமையாக அவித்த முட்டை, நன்கு வேக வைத்த ஆம்லெட் சாப்பிடலாம். நன்கு சமைத்த கோழிக்கறி, முட்டைகளை தைரியமாக சாப்பிடலாம். ஒருவேளை நாம் வாங்கும் கோழி இறைச்சியில், நோய் கிருமி இருந்தால், அது சமைக்கும் போது அழிந்து விடும்.பொதுவாக, 70 டிகிரி வெப்பத்தில் பறவை காய்ச்சல் வைரஸ் அழிந்து விடும். அரை வேக்காட்டில் சமைத்த கோழிக்கறி, முட்டைகளை சாப்பிடக் கூடாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE