பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு உள்ளது. வடக்கிப்பாளையம் பிரிவில், கோவை ரோடு சந்திப்பு பகுதியில் இருந்த சென்டர் மீடியன் இடைவெளி அடைக்கப்பட்டுள்ளது. ரோடு சந்திப்பு பகுதியில், சென்டர் மீடியனில், இடைவெளி ஏற்படுத்த வேண்டுமென, மாவட்ட கலெக்டரிடம், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் மனு கொடுத்துள்ளார். மனுவில் கூறியதாவது:பொள்ளாச்சி - கோவை ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடக்கிப்பாளையம் பிரிவில், இடைவெளியின்றி சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.வடக்கிப்பாளையம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள், கோவை வழித்தடத்தில் சென்றும், கோவை ரோட்டில் இருந்து வடக்கிப்பாளையம் செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி வழித்தடத்தில் சென்றும், 'யு-டேர்ன்' செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.வாகனங்கள் அதிவேகமாக செல்லக்கூடிய இந்த பகுதிகளில், விபத்துகள் அதிகளவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், கனரக வாகனங்கள் திரும்புவதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, வடக்கிப்பாளையம் பிரிவில் இவைவெளியுடன் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.பொதுமக்கள் வசதிக்காக, காலதாமதம் செய்யாமல் வடக்கிப்பாளையம் பிரிவில், இடைவெளியுடன் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE