கடலுார்:நீதிமன்ற பணிக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி, புதுநகரைச் சேர்ந்தவர் சத்தியதாஸ், 26; பெயின்டர். இவர், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்விடம் அளித்த புகார்:கடலுார் செல்லங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யராஜ், 32. இவர், நெல்லிக்குப்பம், பெரிய சோழவல்லி கிராமத்தில் உள்ள, அவரது பாட்டி வீட்டிற்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டது.
தனக்கு நீதிபதிகளிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. தற்போது, நீதிமன்ற பணிகளுக்கு ஆள் எடுக்கப்படுகிறது. பணம் கொடுத்தால் வேலை வாங்கி விடலாம் எனக் கூறினார். பல தவணைகளில், 6 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன்.பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் பணிபுரிய, பணி நியமன ஆணை வழங்கினார். பின், ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, ஓட்டலில் அறை எடுத்து தங்கினோம். பின், சிதம்பரத்திற்கு பணியிட மாற்றம் வாங்கி விட்டதாக கூறினார்.இதனால், எனக்கு சத்யராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொடுத்தது போலி பணி நியமன ஆணை என தெரிந்தது. பணத்தை திரும்பக் கேட்டேன். என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார்.
எஸ்.பி., உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, சத்யராஜ், உடந்தையாக இருந்த செந்தில்குமார், 43, ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE