தமிழகத்தில், 10 மாத இடைவெளிக்கு பின், முழு வீச்சில் இயங்க உள்ள தியேட்டர்களால், பொங்கல் திருவிழா களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், கொரோனா பரவலில் இருந்து மக்களை எந்த வகையில் பாதுகாக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கொரோனா தாக்கத்தால், தமிழகத்தில் கடந்தாண்டு, மார்ச், 25 முதல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், தளர்வுகளுடன் நவ., 10ம் தேதி திறக்கப்பட்டன. தியேட்டர்களில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா அச்சுறுத்தல், பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகாததால், எதிர்பார்த்த கூட்டம் தியேட்டருக்கு வரவில்லை.
பெரிய நடிகர்களின் படங்கள் சில, ஆன்லைன், ஓ.டி.டி., தளங்களில் வெளியானது. இதுவும் தியேட்டரில் கூட்டம் வராததற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. ஆனாலும், தியேட்டர் திறப்புக்காக பல படங்கள் காத்திருந்தன. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில், 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பற்றிய முன்னெச்சரிக்கைகளை விளம்பரமாக திரையிட வேண்டும் என, அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்பை தொடர்ந்து, பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன. கொரோனாவால் துவண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு இவ்விரண்டு படங்கள் மூலம் விடிவு காலம் பிறக்கும் என திரைத் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.அதேவேளையில், கொரோனா இரண்டாவது அலை உருவாகி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சமூகஇடைவெளி இல்லாமல், தியேட்டர்களில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது எந்தளவு பாதுகாப்பாக இருக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பொது சுகாதார நிபுணர், பிரதீப் கவுர், இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், 'மூடப்பட்ட அறையில், சமூக இடைவெளி இல்லாமல் நெருங்கி அமர்ந்து இருப்பது, கொரோனாவை அதிகவேகமாக பரப்பும். இதுபோன்ற இடங்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்' என எச்சரித்துள்ளார்.
ஓ.டி.டி., தளங்கள் மாயை
கொண்டாட்டம் என்றுமே தனியாக இருந்ததில்லை. உளவியல் ரீதியாக, நண்பர்கள், காதலர்கள், குடும்பத்தினர் என அனைவரும் ஒன்றாக கூடி கொண்டாடும் திருவிழாக்களில், சினிமாவும் ஒன்று. நீண்ட நாள் ஆகும் என தவித்த நிலையில், தற்போது தியேட்டர்களில், 100 சதவீத அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி. தியேட்டருக்கு மாற்றாக வந்த ஆன்லைன் தளங்கள், சின்ன பட்ஜெட் படங்களுக்கு கைகொடுக்கவில்லை. ஓ.டி.டி., தளங்கள், வளரும் கலைஞர்களுக்கானதல்ல. இதன் மீது, ஒரு மாயை மட்டுமே இருந்தது.
- இ.வி.கணேஷ் பாபு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.
தியேட்டர்களில் பாதுகாப்பு
தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம், 1,100க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இதில், 700 தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் எனப்படும், ஒரே வளாகத்தில் பல திரைகள் உள்ளவை. 400க்கும் மேல், சிங்கிள் தியேட்டர் எனப்படும், ஒரே திரை கொண்ட சினிமா தியேட்டர்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒவ்வொரு காட்சி முடியும் போதும், சானிடைசர் தெளிக்கப்படும். முக கவசம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. தெர்மாமீட்டர் கொண்டு பரிசோதித்த பிறகே, ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். மக்களின் தேவைக்கு ஏற்ப சானிடைசரும் வைக்கப்பட்டுள்ளது. கேண்டனில் பாக்கெட் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE