கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்தில் பரவாமல் தடுக்க, இரு மாநில எல்லையில், 12 செக்போஸ்ட்களில் தீவிர வாகன சோதனையும், மருந்து தெளிப்பும் இன்று முதல் துவங்குகிறது.கேரளா மாநிலம், கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் வாத்துகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. இதற்கு பறவை காய்ச்சல் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.இதனால், கேரளாவில் இருந்து, தமிழகத்திலும் பறவை காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்கும் முயற்சியாக, கேரளா எல்லையில் ஏற்கனவே உள்ள, 12 செக்போஸ்ட்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள, தமிழக கால்நடைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொள்ளாச்சி பகுதியில், கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, செம்மனாம்பதி, குப்பாண்டகவுண்டனுார் உள்ளிட்ட ஏழு இடங்களிலும், கோவையில் உள்ள வேலந்தாவளம், வாளையார், ஆனைகட்டி உள்ளிட்ட, ஐந்து இடங்களிலும் இன்று முதல், தீவிர வாகன கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.கேரளாவில் இருந்து, தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும்செக்போஸ்ட்களில், குளோரின் டை ஆக்சைடு மருந்து தெளிக்கப்படுகிறது.வாகன கண்காணிப்பு குழுவில், ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் இருப்பர்.கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, கேரளாவுக்குள் திருப்பி அனுப்பப்படுகிறது.இவ்வாறு, கால்நடை துறையினர் தெரிவித்தனர்.உடுமலைதிருப்பூர் மாவட்ட எல்லையான, உடுமலை ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில், கால்நடைத்துறை சார்பில், சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்துக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அதற்குப்பின் அனுமதிக்கப்படுகிறது. கேரளாவிலிருந்து, கோழி, முட்டை, கோழித்தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள், திருப்பி அனுப்பப்படுகிறது.சோதனைச்சாவடியில், கால்நடைத்துறை மண்டல இயக்குனர் பொன் பாரிவேந்தன், துணை இயக்குனர் கவுசல்யா, உதவி இயக்குனர் ஜெயராம் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
- நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE