சென்னை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கோயம்பேடு மார்க்கெட் வார விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட் பல்வேறு கெடுபிடிகளுடன் இயங்கி வருகிறது. இங்கு, நள்ளிரவு, 12:00 மணிமுதல் காலை, 10:00 மணிவரை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணிக்காக, மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நாளில், அங்காடி நிர்வாக குழு வாயிலாக, சிறப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. சனிக்கிழமை காலை வர்த்தகம் முடிந்ததும், வழக்கமான பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஞாயிறு விடுமுறைக்கு பின் மார்க்கெட் திறக்கப்பட்டால், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள், பழங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டன.
விற்பனையாகாமல் பல டன் காய்கறிகள், பழங்கள் தேக்கம் அடைந்ததால், வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர். எனவே, மார்க்கெட்டின் வார விடுமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, மார்க்கெட்டிற்கு மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை என, அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது. கடைகள் இயங்கும் நேரம், பகல், 12:00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE