வேளச்சேரி : நேற்றைய மழையில், வேளச்சேரி பகுதி மீண்டும் மூழ்கியது. கழிவு நீர் வெளியேற்று நிலையத்தில் இருந்து, கழிவு நீரை திறந்து கால்வாயில் விட்டதால், அவை தெருக்களில் புகுந்து, அங்குள்ள மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது.
நேற்று அதிகாலை முதல், மாலை வரை, சென்னையில் பரவலாக மழை பெய்தது. ஒவ்வொரு மழைக்கும், வேளச்சேரி பகுதி பாதிக்கப்படும். குறிப்பாக, நேதாஜி நகர், ராம் நகர், விஜய நகர் உள்ளிட்ட பகுதிகள், கடுமையாக பாதிக்கப்படும்.நேற்று பெய்த மழையில், வேளச்சேரி ஏரி உபரி நீருடன், வேளச்சேரி - -தரமணி கால்வாய் நீர், பின்னோக்கி பாய்ந்ததால், விஜய நகர், ராம் நகர் பகுதிகள், வழக்கத்தை விட கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், வேளச்சேரி நுாறடி சாலையில் உள்ள, கழிவு நீர் வெளியேற்று நிலையத்தில் இருந்து, அதை ஒட்டி உள்ள கால்வாயில், கழிவு நீர் திறந்து விடப்பட்டது.இதனால், கால்வாயில் சென்ற மழை நீருடன், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. அவை, கால்வாய் நிரம்பி, தெருக்களில் புகுந்ததால், அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் உள்ள நகருக்குள் மழை நீர் புகுந்ததால், அங்குள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.சில இடங்களில், வீடுகளில் மழை நீர் புகுந்தது. குறிப்பாக, செம்மஞ்சேரி பகுதியில், பலர் பாதிக்கப்பட்டனர். நீரோட்டத்திற்கு தடையாக இருந்த அடைப்புகளை, மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர்.குடிசை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது. தெருக்களில், தேங்கிய மழை நீர் வடிய, ஆங்காங்கே நீர் இறைக்கும் மோட்டார் அமைக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE