சென்னை:தமிழகத்தில் நேற்று புதிதாக 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களின் 971 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள 241 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் 60 ஆயிரத்து 304 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சென்னையில் 235 பேர்; கோவையில் 81 பேர்; செங்கல்பட்டில் 55 பேர் உட்பட மாநிலம் முழுதும் 820 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1.45 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் எட்டு லட்சத்து 22 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதில் 12 வயதுக்கு உட்பட்ட 29 ஆயிரத்து 378 சிறார்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 8849 முதியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தோரில் 971 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து எட்டு லட்சத்து 2385 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
தற்போது சென்னையில் 2342 பேர்; கோவையில் 738 பேர் உட்பட 7808 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா தொற்றால் நேற்று 11 பேர் உட்பட இதுவரை 12 ஆயிரத்து 177 பேர் இறந்துள்ளனர்.பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் என 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேருக்கு மரபணு மாறிய தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டலில் 136 பேர் பாதிப்பு
சென்னை நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து ஊழியர்களுக்கும், பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி, 9888 பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில், 136 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE