ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கடந்தாண்டு, 9.13 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.ஆனைமலை ஒன்றியம் முழுவதும், 57 ஆயிரம் ஏக்கர், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்காக, தேங்காயை கொப்பரையாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள ஏழு உலர்களங்களை, விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தி ஆண்டு முழுவதும், கொப்பரை உலர வைக்கின்றனர். வாரம் தோறும் செவ்வாய் கிழமை நடக்கும் கொப்பரை ஏலத்தில், விவசாயிகள் பங்கேற்று, கொப்பரையை நேரடியாக, விற்பனை செய்கின்றனர்.'சிண்டிகேட்' இல்லாத சூழலால் கொப்பரை வர்த்தகம் ஆண்டுதோறும் அதிகரித்து, அரசுக்கு வருவாய் அதிகரித்து வருகிறது. 2018ல் நடந்த ஏலத்தில், 945 டன் கொப்பரை வரத்தும்; 9.7 கோடி ரூபாய் வர்த்தகமும் நடந்தது. 2019ல், 1,205 டன் கொப்பரை, 9.49 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. 2020ல் நடந்த ஏலத்தில், ஆயிரம் டன் கொப்பரை வரத்து இருந்தது; ஒன்பது கோடியே, 13 லட்சத்து, 36 ஆயிரத்து, 389 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:கடந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, ஒன்பது வாரங்கள் கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஏலம் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், 2019ம் ஆண்டைக்காட்டிலும், 2020ல் அதிக வரத்து மற்றும் வர்த்தகம் நடந்திருக்கும்.ஒவ்வொரு வியாபாரியும், ஏலத்தொகையில் ஒரு சதவீதத்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். கடந்தாண்டு நடந்த ஏலத்தில், வியாபாரிகள் செலுத்திய கட்டணத்தால் அரசுக்கு, 9.13 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.இவ்வாறு, மணிவாசகம் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE