வால்பாறை:வால்பாறை நகரில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், அரசு சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழாவும் நடத்தப்படுகிறது.இந்நிலையில், சுற்றுலா தலமான வால்பாறையில் நகராட்சி சார்பில், படகுஇல்லம் அமைக்கும் பணி நடக்கிறது. வால்பாறை நுழைவுவாயிலில் நகராட்சி சார்பில், 5.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளன. சுற்றுலாபயணிகள் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக ரோடு அமைக்கும் பணியும் நடக்கிறது. மழை காரணமாக பூங்கா அமைக்கும் பணியில், ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது பணிகள் வேகப்படுத்தப்பட்டு, மே மாதத்துக்கு முன்பாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் பவுன்ராஜிடம் கேட்ட போது, ''வால்பாறை நகரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 4.5 ஏக்கர் நிலப்பரப்பில், 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக, பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கப்படுகிறது. வரும், பிப்., 24ம் தேதி படகுஇல்லம் மற்றும் பூங்கா சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE