உடுமலை:உடுமலை, திருமூர்த்திநகரில் மத்திய அரசின், தென்னை வளர்ச்சி வாரியத்தின் நாற்றுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம், கடந்த, 2015ம் ஆண்டு, 102 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது. இதில், 65 ஏக்கர் பரப்பில், தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.இங்குள்ள நாற்று பண்ணையில் ஆண்டுதோறும், 1.5 லட்சம் நாற்றுகள் வரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த, மூன்றாயிரம் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வளாகத்தில், 2 ஏக்கரில், 10 வகையான ரகங்களை கொண்டு செயல் விளக்கத்திடலும் அமைக்கப்பட்டுள்ளது. தென்னை வளர்ச்சி வாரியத்தின், கொச்சி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண் பல்கலை.,யின், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள், படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல், திருமூர்த்தி நகர் ஆராய்ச்சி நிலையத்திலும், பயிற்சிகள் வழங்க கோரிக்கை விடுத்துவருகின்றனர். திருமூர்த்திநகரில், தென்னை வளர்ச்சி வாரியம், நாற்றுப்பண்ணை செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், ஆராய்ச்சி நிலையத்துக்கான எவ்வித கட்டமைப்புகளும் உருவாக்கப்படவில்லை.திருப்பூர் மாவட்டத்தில், தென்னை சாகுபடியில், வெள்ளை ஈ, தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. தாக்குதலை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைக்காமலும், ஒட்டுண்ணிக்காகவும் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே துவக்கப்பட்ட தென்னை ஆராய்ச்சி நிலையம், நாற்றுகளை மட்டுமே உற்பத்தி செய்வது, எதிர்காலத்தில், எவ்வித பலனும் அளிக்காது.புதிய ரகங்கள், நோய்த்தடுப்புக்கான மருந்துகள், தொழில்நுட்பங்கள் கண்டறிதல் உட்பட பணிகளுக்காக அனைத்து கட்டமைப்புகளையும், திருமூர்த்திநகரில் ஏற்படுத்த வேண்டும் என்பதே, பல ஆயிரக்கணக்கான தென்னைவிவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE