உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு, இயல்பை விட கூடுதல் மழை கிடைத்த நிலையில், உடுமலையில், சராசரி மழைப்பொழிவு கிடைத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தின், சராசரி மழையளவு, 618.20 மி.மீ., ஆகும். கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்தாண்டில், தென்மேற்கு பருவமழை இருமடங்கு அதிகமாக பெய்தது.ஜன., - பிப்., மாதங்களை உள்ளடக்கிய, குளிர் காலத்தில், 0.29 மி.மீ., அளவுக்கு மட்டுமே மழை கிடைத்தது. மார்ச் - மே வரையிலான, கோடை பருவத்தில், 111.85 மி.மீ., மழை பதிவாகியது.ஜூன் முதல் செப்., வரையிலான, தென்மேற்கு பருவத்தில், 299.43 மி.மீ., பதிவாகியது. அக்., துவங்கி டிச., வரையிலான வடகிழக்கு பருவத்தில், 327.21 மி.மீ., பெய்துள்ளது. இயல்பான மழையளவை விட, 120.58 மி.மீ., அதிகரித்து, 738.78 மி.மீ., கிடைத்துள்ளது.உடுமலையில், கடந்தாண்டு இயல்பை விட மழை குறைந்துள்ளது. குளிர் கால மழை சராசரியளவு, 14 மி.மீ., ஆக உள்ள நிலையில், ஒரு மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. கோடை மழையளவு சராசரி, 135.10 ஆக உள்ள நிலையில், கடந்தாண்டு, 75 மி.மீ., மட்டுமே கிடைத்துள்ளது.தென்மேற்கு பருவ மழை சராசரியாக, 154.80 மி.மீ., ஆக உள்ள நிலையில், 160.6 மி.மீ., என கூடுதல் மழை கிடைத்துள்ளது. வட கிழக்கு பருவ மழை, சராசரியளவு, 314.30 மி.மீ., ஆக உள்ள நிலையில், சராசரியை விட அதிகரித்து, 347.8 மி.மீ., மழை என, கடந்தாண்டு, 584.4 மி.மீ., மழை கிடைத்துள்ளது. அதிலும், நவ., மாத சராசரி, 120 மி.மீ., ஆக உள்ள நிலையில், 11 மழை நாட்களில், 264 மி.மீ., மழை கிடைத்துள்ளது.இருப்பினும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மடத்துக்குளம், குடிமங்கலம் கிராமப்பகுதிகளில், இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில், அமராவதி, பி.ஏ.பி.,திட்ட தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இயல்பை விட கூடுதலாக பெய்தது. இதனால், அணைகள் நிரம்பின.அமராவதி அணை நிரம்பிய நிலையில், பி.ஏ.பி., பாசனத்தில், 2,3 ஆகிய இரண்டு மண்டல பாசன நிலங்களுக்கும் முழுமையாக நீர் வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, குளம், குட்டைகளிலும் நீர் இருப்பு அதிகரித்து, நிலத்தடி நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.நெல், மக்காச்சோளம், காய்கறி பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது. நடப்பாண்டும், ஜன., மாதத்திலும் மழை தொடர்ந்து வருகிறது. இம்மாதத்தில், சராசரியளவு, 7.10 மி.மீ., ஆக உள்ள நிலையில், 3 மழை நாட்களில், 23.8 மி.மீ., மழை கிடைத்துள்ளது. இவ்வாறு, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.13 ஒன்றியங்களில் கண்காணிப்புகுடிநீர் வடிகால் வாரியத்தால், மாவட்டம் முழுக்க, 13 ஒன்றியங்களில், தலா, 3 மையம் அமைக்கப்பட்டு, கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் கண்காணிக்கப்படுகிறது. பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய, நீர்மட்டம் அளவீடு செய்யப்பட்டு, மாவட்டத்தின் சராசரி நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது.வடகிழக்கு பருவமழைக்கு முன், மே மாதம், நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தரைமட்டத்தில் இருந்து, சராசரி நீர்மட்டம், 12.5 மீட்டராக இருந்தது. வட கிழக்கு பருவமழை முடிந்ததும், கடந்த மாதம், மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சராசரி நீர்மட்டம், 10.5 மீட்டராக இருந்தது; 2 மீட்டர் அளவுக்கு, நீர்மட்டம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE