வால்பாறை:வால்பாறையில், அத்துமீறி மது 'சில்லிங்' விற்பனை செய்யப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகர், ரொட்டிக்கடை, முடீஸ், சோலையாறுடேம் ஆகிய நான்கு இடங்களில் ஐந்து டாஸ்மாக் கடைகள் உள்ளன. எஸ்டேட் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லாததால், வால்பாறையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் இருந்து, மொத்தமாக சரக்கு கொண்டு சென்று தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குடிப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால், தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது. இது தவிர, வால்பாறை நகரில் பெட்டிக்கடைகளில் கூட மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மொபைல்போனில் தெரிவித்தால், 24 மணி நேரமும் 'சரக்கு' சப்ளை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை விடுமுறை நாட்களிலும் தடையின்றி சரக்கு விற்பனை நடக்கிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், தங்கும் இடத்திற்கே சரக்கு சப்ளை செய்யப்படுகிறது. குவாட்டருக்கு, 50 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், வால்பாறையில் 'சில்லிங்' மது விற்பனையை போலீசார் கட்டுப்படுத்தினர்.தற்போது, மீண்டும் 'சில்லிங்' விற்பனை ஜோராக நடக்கிறது. இதை தடுக்க வால்பாறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE