மேட்டுப்பாளையம்:ஓடந்துறை ஊராட்சியில், அனைத்து வீடுகளுக்கும், இலவச குடிநீர் குழாய் வழங்க, ரூ.1.52 கோடி மதிப்பில், புதிய குடிநீர் திட்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ஓடந்துறை ஊராட்சியில், கடந்த, 15 ஆண்டுகளில் நடந்த சிறப்பான வளர்ச்சி பணிகளால், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டும் கிடைத்துள்ளன. இந்நிலையில், இந்த ஊராட்சியில், 1,700 வீடுகள் உள்ளன. இதில், 700 வீடுகளுக்கு மட்டுமே, தற்போது குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 1,000 வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.இதுகுறித்து, ஊராட்சி தலைவர் தங்கவேல் கூறியதாவது:ஓடந்துறை ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளன. இதில், பவானி ஆற்றிலிருந்து நீர் எடுத்து, ஊமப்பாளையம், வினோபாஜி நகர், நரிபள்ளம், காந்தி நகர், கவின் கார்டன், உப்புபள்ளம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கால்லாற்றிலிருந்து நீர் எடுத்து, கல்லாறுபுதுார், கல்லாறு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில், 1.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் வாயிலாக, அனைத்து குடும்பங்களுக்கும், இலவச குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பட்டி கிராமத்தில் பவானி ஆற்றிலும், கல்லாறிலும், புதிதாக இரண்டு கிணறுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ஊமப்பாளையம், கவின் கார்டன், கல்லாறுபுதுார் ஆகிய, 3 இடங்களில் தலா, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மூன்று மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படுகின்றன. அதில் ஆற்று நீரை தேக்கி, அனைத்து குடும்பங்களுக்கும், குடிநீர் வழங்கப்பட உள்ளது. குடிநீர் திட்டப் பணிகள் ஜரூராக நடைபெறுகிறது. பகிர்மான குழாய்கள், ஊராட்சி முழுவதும் அமைத்து விரைவில் குடிநீர் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE