கோவை:கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், சரக்கு வாகனங்கள், தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்படுகின்றன.
கேரளாவில், பறவைக்காய்ச்சலை உண்டாக்கும், 'எச்5என்8' வைரஸ் பாதிக்கப்பட்டு, வாத்துகள் இறந்தது, தெரியவந்தது. அங்கு பறவைக்காய்ச்சல் தடுப்புப்பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. இதன் எதிரொலியாக, அண்டை மாநிலமான தமிழகத்திலும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில், பறவைக்காய்ச்சல் தடுப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், வாளையாறு, க.க.சாவடி,வேலந்தாவளம் ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருந்து நேற்று கேரளா நோக்கி சென்ற கறிக்கோழி வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் பாரிவேந்தன் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பறவையினங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், மீண்டும் திரும்பும்போது, 'வாட்டர்வாஷ்' செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கறிக்கோழி பண்ணைகளுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநில எல்லையான திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ஒன்பதாறு சோதனைச் சாவடியில், பறவை காய்ச்சல் நோய் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கிருமி நாசினி தெளிக்கப்படுவது மட்டுமின்றி, கேரளாவில் இருந்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வரப்படும் பறவை இனங்கள் கண்டறியப்பட்டால் திருப்பி அனுப்பப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE