பேரூர்:பேரூர் அருகே, விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
கோவை, இக்கரை போளுவாம்பட்டி காரமரத்தூரை சேர்ந்தவர் ரவி, 40; விவசாயி. இவரது தோட்டம் செம்மேடு உக்குளம் பகுதியில் உள்ளது. தென்னம்மநல்லுாரை சேர்ந்த ஆறுச்சாமி, 62, என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். ஆறுச்சாமி வனவிலங்குகளை தடுக்க, நிலத்தை சுற்றியும் மின்வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், ஆண் யானை ஒன்று உக்குளம் பகுதிக்கு வந்துள்ளது. ஆறுச்சாமியின் நெல்வயலுக்குள் செல்ல முயன்றபோது, அந்த 20 வயது ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது.போளுவாம்பட்டி வனத்துறை மற்றும் மின்வாரியத்தினர் தோட்டத்தில் ஆய்வு செய்தனர். விசாரணையில், விவசாய மின் இணைப்பை பயன்படுத்தி, நேரடியாக மின் வேலிக்கு இணைப்பு கொடுத்திருந்தது தெரியவந்தது.
யானையின் வாய் மற்றும் தும்பிக்கையில் மின்கம்பிகள் சிக்கி இருந்தன. வழக்கு பதிவு செய்த வனத்துறையினர், தலைமறைவான ஆறுச்சாமியை தேடி வருகின்றனர்.
மூன்றாவது சம்பவம்
இதே பகுதியில், 2009ம் ஆண்டு, ஆறுச்சாமியின் சகோதரர் பாப்புசாமியின் தோட்டத்துக்குள் புகுந்த யானை, மின்சார வேலியில் சிக்கி பலியானது. 2014ம் ஆண்டு, கரியாம்படிகையில் பாபு என்பவரின் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி, ஒரு யானை பலியானது. தற்போது, மூன்றாவதாக இந்த யானை பலியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE