கடந்துபோன, 2020 ஒரு துரதிஷ்டமான ஆண்டு. 'இத்தோடு முடிந்தது கெட்டகாலம்... 2021ம் ஆண்டில் புதியதொரு உலகம் திறக்கும்' என, மக்கள் திடமாக நம்புகின்றனர்.
ஆனால், இந்த கொரோனா வைரஸ், தனது பழைய முகத்துடன், புதுப்பரிணாமங்களோடு உலா வரப்போகிறது என்பதே உண்மை.கொரோனாவால், இல்லத்தரசிகள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகளின் பாதிப்பு குறைவாகவே கணக்கிடப்படுகிறது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.
உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரவீன் ராஜ் கூறுகையில், ''தொற்றுநோய் காலத்தில், குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால், இல்லத்தரசிகளுக்கு வேலை பளு அதிகம். அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆண்களுக்கு அலுவலக வேலை மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்றால், பெண்களுக்கு உடல் மற்றும் மனம் இரண்டுமேவெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால், எடை அதிகரித்து பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது.
பல பெண்களுக்கு மாதவிடாய்பிரச்னைகள் ஏற்பட, மன அழுத்தமே முக்கிய காரணம். 'ஆன்லைன்' வகுப்புகள் மற்றும் சுதந்திரமாக வெளியே செல்ல இயலாத காரணத்தால் குழந்தைகள் அதிக மன அழுத்தத்துடன் உள்ளனர். ஆனால், குழந்தைகளின் மன அழுத்தம் சரிவர கணக்கிடப்படுவதில்லை,'' என்றார்.
மனச்சோர்வு
மனநல மருத்துவர் டாக்டர் உமா மகேஸ்வரி கூறுகையில், ''மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டநோயாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. வேலையின்மை காரணமாக, தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன.வாகன கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், டிரைவர்கள் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
கல்லுாரி மாணவர்களைப் பொறுத்தவரை, நான்கு சுவர்களில் அடைபட்டிருப்பதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகின்றனர். பெற்றோருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தைகளை சமாளிக்க முடிவதில்லை. ஐ.டி., தொழில் வல்லுனர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். ஏனென்றால், அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால், அதிக அளவு உழைப்பதாகவும், மற்ற நேரங்களைப் போல தங்கள் சகாக்களுடன் பழக முடிவதில்லை என்றும் கருதுகின்றனர்,'' என்றார்.
மூச்சுத்திணறல்
நுரையீரல் நிபுணர் டாக்டர் பட்டாபிராமன் கூறுகையில்,''மூச்சுத் திணறல் அதிகரிப்பதற் கான முக்கிய காரணங்களில், மன அழுத்தமும் ஒன்று. பதற்றம் காரணமாக ஏற்படும் மூச்சுத் திணறலை,'ஹைப்பர்வென்டிலேஷன்' என அழைப்பர்.நுரையீரல் செயல்பாடு இயல்பானதாக இருந்தாலும், போதுமான காற்று நுரையீரலுக்குள் செல்வதில்லை என, நோயாளிகள் உணருவதால், அது சிரமத்தை தருகிறது. யோகா, சுவாச பயிற்சி போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களையும், தேவையான மருந்துகளையும் பயன்படுத்தலாம்,'' என்றார்.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE