ஐதராபாத் : கொரோனா தடுப்பூசி தொடர்பாக, 'சீரம் மற்றும் பாரத் பயோடெக்' நிறுவனங்கள் இடையே வார்த்தைப் போர் நிலவி வந்த நிலையில், சமரசம் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த தயாராக உள்ளதாக, இரு நிறுவனங்களும் கூறியுள்ளன.
கொரோனாவுக்கு எதிராக, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள, 'கோவிஷீல்ட்' என்ற தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை, மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது.
இந்த இரண்டு தடுப்பூசிகளை, அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் பயன்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'மற்ற நிறுவனங்கள் தயாரிப்பது தடுப்பூசி அல்ல; அது வெறும் தண்ணீர்தான்' என, சீரம் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி அதார் பூனேவாலா கூறியிருந்தார். இதையடுத்து, சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் இடையே பரஸ்பரம் விமர்சித்து, கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. தங்களுடைய இணையதளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அவை கூறியுள்ளதாவது:
இந்தியா மற்றும் உலக மக்களின் உயிர் காக்கும் மிகப் பெரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த தடுப்பூசிகள், மக்களின் உடல்நலத்தை காப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உள்ளது. இந்த தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதன்படி, நாங்கள் இணைந்து, தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE