மதுரை, : நெல் அறுவடை பணிகள் துவங்கிவிட்ட நிலையில் கொள்முதல் மையங்களை இன்னும் திறக்காததால் விவசாயிகள் குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் நெல்லை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் வேளாண்மைதுறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாலுகா வாரியாக விவசாயிகள் என்னென்ன ரகங்கள் பயிரிடுகின்றனர் என்ற புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறது. அறுவடையின் போது நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அந்தந்த பகுதிகளில் தேவைக்கேற்ப இரண்டு மாதங்களுக்கு நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இரண்டு துறைகளும் தங்களது பணிகளை அறுவடைக்கு முன்பே திட்டமிட்டு செய்தால் கொள் முதல் மையம் திறப்பதில் தாமதம் ஏற்படாது.
இந்தாண்டு அறுவடை துவங்கி விட்ட நிலையிலும் மையங்கள் திறக்கவில்லை. கொள்முதல் மையத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் கமிட்டி அமைத்து மையத்தை நிர்வகிக்கின்றனர்.சாக்கு இல்லை என்பது ஒரு சாக்குமையம் அமைத்தாலும் அனைத்து விவசாயிகளின் நெல்லையும் கொள்முதல் செய்வதில்லை. நெல்லை 40 கிலோ மூடையாக சாக்கில் அளந்தபின், நேரடியாக கோடவுனுக்கு கொண்டு செல்ல வேண்டும். மூடை கட்டும் சாக்கை அரசு தான் வழங்குகிறது. பாதிநேரங்களில் மையத்திலேயே நெல்லை இருப்பு வைக்கின்றனர். இதனால் சாக்கு இருப்பு இல்லை என்று விவசாயிகளை காக்க வைக்கின்றனர். இந்த நேரத்தில் வியாபாரிகள் அவர்களை சாதுர்யமாக அணுகி மையத்தில் தாமதம் ஆகும் என்று கூறி, குறைந்த விலைக்கு நெல்லை பெறுகின்றனர்.
அறுவடை வரை காத்திருந்த விவசாயிகளுக்கு உடனடி பணத் தேவை என்பதால் வேறு வழியின்றி வியாபாரிகளிடம் விற்கின்றனர். அந்த வியாபாரிகள் அதே நெல்லை மீண்டும் மையத்திற்கு கொண்டு வந்து விவசாயிகள் என்ற பெயரில் அரசு விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். விவசாயிகளுக்கு 65 கிலோ மூடை எனில் ஒவ்வொரு மூடைக்கும் ரூ.300 - 400 வரை நஷ்டம். உழைப்பே இல்லாத வியாபாரிகளுக்கு இந்த தொகை அப்படியே லாபமாக கிடைத்து விடுகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கோபாலன், தலைவர், மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு: அறுவடை ஆரம்பிக்கும் முன்பே கொள் முதல் மையம் திறப்பதற்கான பணிகளை வேளாண்துறை, நுகர்பொருள் வாணிப கழகம் இணைந்து செய்ய வேண்டும். தற்போது வரை மையம் திறக்கவில்லை. அடுத்தவாரம் திறக்கலாம் என்கின்றனர். இதற்குள் பாதி விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லை விற்று விடுவர். இதனால் எங்களுக்கு லாபமில்லை. கொள்முதல் மையத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களே நடத்த வேண்டும் என அரசு சட்டம் இயற்ற வேண்டும். மையத்தில் தேங்கும் நெல் மூடைகளை கோடவுனுக்கு உடனுக்குடன் அனுப்புவதன் மூலம் சாக்கு பற்றாக்குறையை தவிர்க்கலாம்.
பழனிசாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்: மையம் திறக்காததால் 5 ஏக்கரில் நெல்லை அறுவடை செய்யாமல் வைத்துள்ளேன். கடந்தாண்டைப் போல வேளாண்மை துறை முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்காது. இப்போதே கொட்டாம் பட்டி, கருங்காலக்குடி மற்றும் மானாவாரி சாகுபடி பகுதிகளில் நெல் அறுவடை பாதி முடிந்து விட்டது. அதிகாரிகளுக்காக விளைபொருட்கள் காத்திருக்குமா என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE