மாவட்டத்தில் சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பனிப்பொழிவும் இருப்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது.
தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வரதமாநதி, பாலாறு - பொருந்தலாறு, ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்ந்து குளங்கள், கண்மாய், குட்டைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் கிராம மக்கள் பலரும் நீர் நிலைகளில் குடும்பத்தினருடன் குதுாகலமாக குளித்து மகிழ்கின்றனர்.மலைப்பகுதியில் மழை நீடிப்பதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆத்துார் கூழையாறு நீர் வீழ்ச்சி, பன்றிமலை செல்லும் வழியில் அமைதி சோலை பகுதி, நத்தம் அய்யனார் அருவி, குடகிப்பட்டி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இளைஞர்கள் பலர் தடையை மீறி அருவிகளுக்கு ஆபத்து பயணம் மேற்கொண்டு குளிக்கின்றனர். குளிக்கும் ஆர்வத்தில் பாறை இடுக்குகளில் சிக்கி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆத்துார் நீர் வீழ்ச்சி பகுதிக்கு தடையை மீறி நுழைந்த இளைஞர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் இருக்கும் அருவிகளுக்கு செல்லக் கூடாது. மீறினால் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE