ஆத்தூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, கூட்டுறவு சங்கத்தலைவரை கண்டித்து, மலைவாழ் மக்கள் சங்கத்தினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், செல்லியம்பாளையத்தை சேர்ந்த, அ.தி.மு.க., கூட்டுறவு சங்கத்தலைவர் கோபி உள்ளிட்ட நிர்வாகிகளை கண்டித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், கல்வராயன்மலை மலைவாழ் மக்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. ஆத்தூர், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க மாநில தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு தலைமை வகித்து பேசியதாவது: கடந்த டிச., 14ல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, செல்லியம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவர் கோபி, அடியாளாக வந்த செல்வம், பழனிவேல், கணியான்வளவு ராமச்சந்திரன், சந்திரன் ஆகியோர், கீழ்நாடு ஊராட்சி, கணியன்வளவு மலைக்கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கத்தை, கொடூரமாக தாக்கினர். அவர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், கைது செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் அத்துமீறல் குறித்து, கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சேலம், விழுப்புரம் கல்வராயன்மலை மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, இதுதொடர்பான புகார் மனுவை, ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரையிடம் வழங்கினர். இதுகுறித்து, கூட்டுறவு சங்கத்தலைவர் கோபி கூறுகையில், 'தர்மலிங்கம் பாதையை ஆக்கிரமித்து, கட்டடம் கட்டியதால், பி.டி.ஓ.,விடம் புகாரளித்தனர். அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது, இருதரப்பினர் தகராறில் ஈடுபட்டனர். எனக்கு, அங்கு விவசாய நிலம் உள்ளதால் சென்றிருந்தேன். அப்போது, அடியாட்களை அழைத்துச்செல்லவில்லை. பொய் புகார் கூறி, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE