ஈரோடு: குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய, ஈரோடு மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2 (பெரிய சேமூர்) பில் கலெக்டர் செல்லதுரை, 45; இரவு வாட்ச்மேனாக பணிபுரிந்த இவர், கடந்த டிச., மாதம்தான், பில் கலெக்டராக நியமிக்கப்பட்டார். ஈரோடு, சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்த, பழைய கட்டடங்களை உடைத்து அகற்றும் தொழில் செய்து வருபவர் முரளி, 38; குடிநீர் இணைப்பு கேட்டு, சில நாட்களுக்கு முன் செல்லதுரையை அணுகினார். அவர், 15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் இணைப்பு வழங்க முடியும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து, ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகாரளித்தார். அவர்களின் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய, 15 ஆயிரம் ரூபாயை, செல்லதுரையிடம் நேற்று மாலை வழங்கினார். பணத்தை வாங்கி பாக்கெட்டில் வைத்து கொண்டபோது, வளாகத்தில் மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார், செல்லதுரையை கையும், களவுமாக பிடித்து, 15 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் மேலும் சில ஊழியர்களுக்கு, தொடர்பிருக்கும் என, போலீசார் நம்புகின்றனர். இதுகுறித்தும் அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE