பெங்களூரு: ஆண் ஒருவரின் வயிற்றில் கர்ப்பப்பை இருப்பதாக அறிக்கை அளித்து, அந்நபர் மன அழுத்தத்துடன் வாழ காரணமான, பெங்களூரின், 'போர்டீஸ்' மருத்துவமனைக்கு, நுகர்வோர் உரிமைகள் ஆணையம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
பெங்களூரு, ஆர்.டி.நகர் தின்னுார் பிரதான சாலையில், வசிப்பவர், சந்தன் தேப். இவர், அவ்வப்போது, மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.சில மாதத்துக்கு முன், பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள, போர்டீஸ் மருத்துவமனையில், பரிசோதனை செய்து கொண்டார்.இது தொடர்பாக, ரேடியாலஜி பிரிவு டாக்டர், அளித்த அறிக்கையை பார்த்த, சந்தன் தேப், பேரதிர்ச்சி அடைந்தார். அவரது வயிற்றில், கர்ப்பப்பை இருப்பதாக, குறிப்பிடப்பட்டிருந்தது. பீதியடைந்த அவர், சில நாட்களுக்கு பின், அதே மருத்துவமனையில், மீண்டும் பரிசோதனை செய்து கொண்ட போது, 'கர்ப்பப்பை இல்லை' என தெரிந்தது.
மருத்துவ நிர்வாகத்திடம், புகார் அளித்த அவர், 'டாக்டர்களின் தவறான அறிக்கையால், அதிக மன அழுத்தத்தால் அவதிப்படுகிறேன். இதற்காக, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, கோரினார். மருத்துவமனை நிர்வாகம், 25 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியது. இதற்கு சம்மதிக்காத சந்தன், நுகர்வோர் உரிமைகள் ஆணையத்தில், வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை நடத்திய ஆணையம், கர்ப்பப்பை என்பது, பெண்களுக்கு மட்டும் இருக்கும் அங்கமாகும். ஆனால், இம் மருத்துவமனை, ஆண் வயிற்றில் கர்ப்பப்பை உள்ளதாக, அறிக்கை அளித்துள்ளது. இது விதிமீறலான அறிக்கை. இதனால், மனுதாரர் பீதியுடன், வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அலுவலக பணிகளில், கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். எனவே, அந்த மருத்துவமனைக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம்; வழக்கு செலவாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி, நேற்று முன் தினம் உத்தரவிட்டது.அபராத தொகை, ஒரு லட்சம் ரூபாயை, மனுதாரருக்கு வழங்கும்படி உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE