பெங்களூரு: எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்தியை சரி செய்யும், முதல்வர் எடியூரப்பாவின் முயற்சி, நேற்றும் நீடித்தது. பல, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டினர்
.தாவணகரே, ஷிவமொகா, சிக்கமகளூரு, துமகூரு, ஹாசன், மைசூரு, சாம்ராஜ்நகர் உட்பட வெவ்வேறு மாவட்டங்களின், 20க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ., க்களுடன், முதல்வர் எடியூரப்பா, பெங்களூரின் தனியார் ஓட்டலில் நேற்று ஆலோசனை நடத்தினார். அவர்களின் மனக்குறை, பிரச்னைகளை கேட்டறிந்தார்.சில எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதிகளின் நிதியுதவி பற்றாக்குறை, அபிவிருத்தியில் பின்னடைவு, குடிநீர், கால்நடைகளுக்கு தீவன பிரச்னை, அதிகாரிகள் இடமாற்றம் உட்பட, பல விஷயங்களை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
கொரோனாவால், அபிவிருத்தி பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பார்த்த அளவு, நிதியுதவி கிடைக்கவில்லை. உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.
எம்.எல்.ஏ.,க்களின் பேச்சை, கேட்ட முதல்வர், 'மாநிலத்தின் பொருளாதார நெருக்கடி, உங்களுக்கு தெரியும். கருவூலத்துக்கு வருவாய் கொண்டு வந்த துறைகளுக்கு, தற்போது வருவாய் கிடைக்கவில்லை. அரசின் நிதி நிலைமை, உங்களுக்கு தெரிந்த விஷயம் தான்' என, சமாதானம் செய்ய முயற்சித்தார்.
நேற்றும் கூட, பலரும் அமைச்சர்கள் மீது அதிருப்தி தெரிவித்தனர். 'அமைச்சர்கள் மாவட்ட சுற்றுப்பயணம் செய்வது, எங்களுக்கு தெரிவதே இல்லை. எப்போது வருகின்றனர். எங்கு கூட்டம் நடத்துகின்றனர் என்பது பற்றி, எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. கூட்டத்துக்கும் எங்களை அழைப்பதில்லை. முதலில் இதை சரி செய்யுங்கள்' என கோரினர்.
முதல்வரும், 'அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இடையே, ஒருங்கிணைப்பு பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில், இப்படி நடக்காமல், பார்த்துக்கொள்கிறோம். இம்முறை பட்ஜெட்டில், உங்கள் தொகுதிகளில், நடக்க வேண்டிய பணிகளை, பட்டியலிட்டு தாருங்கள். முடிந்தவரை செயல்படுத்துகிறேன்.'நிதி நிலைமை சீரானவுடன், உங்கள் தொகுதிகளுக்கு, தேவையான நிதியுதவி வழங்கப்படும். கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை துவக்குவோம். நீங்கள் பொறுமையுடன் இருங்கள்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE