சென்னை : வைணவ கோவில்களில், 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு உறுப்பினரான, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் தாக்கல் செய்த மனு:
ஹிந்துக்களுக்கு, வைகுண்ட ஏகாதேசி மிகவும் முக்கிய நாள். ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட இடங்களில், விமரிசையாக கொண்டாடப்படும். திருப்பதியில், வைகுண்ட துவாரம் என, கொண்டாடப்படும்.சொர்க்கவாசல் பண்டிகையான வைகுண்ட ஏகாதேசி அன்று, சில கோவில்கள் மூடப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. சில கோவில்களில் இந்த பழமைவாய்ந்த கலாச்சாரத்தை பின்பற்றுவது இல்லை.கோவில்களில், 10 நாட்கள் வைகுண்ட வாசல் திறந்திருக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோவில், பார்த்தசாரதி கோவில் போன்ற சில கோவில்களில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது; மற்ற கோவில்களில் பின்பற்றப்படுவது இல்லை.ஆகம விதிகளை கண் டிப்புடன் பின்பற்ற வேண்டிய கடமை, அறநிலையத்துறைக்கு உள்ளது. திருப்பதியில், 10 நாட்கள் சொர்க்க துவாரம் திறந்து வைப்பது என, போர்டு முடிவெடுத்துள்ளது.இத்தகைய நடைமுறை, தமிழகத்தில் சில கோவில்களில் தான் பின்பற்றப்படுகிறது.எனவே, ஆகம விதிகளின்படி, வைணவ கோவில்களில், 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்படி, அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது
.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி,''சில கோவில்களில், 10 நாட்கள், சிலவற்றில் இரண்டு நாட்கள் என, சொர்க்கவாசல் திறக்கப்படுகின்றன.வரும் காலங்களில், 10 நாட்களும் சொர்க்க வாசல் திறந்திருக்கும்படி உத்தரவிட வேண்டும்,'' என்றார்
அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் முத்துகுமார், அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராயினர். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறைக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE