புதுடில்லி: உபி., மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அந்த சட்டம், சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இரண்டு மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில், திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின்படி, மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் உத்தரகாண்ட் அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் விஷால் தாக்ரே, தொண்டு நிறுவனம் ஒன்று மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களை நாடும்படி நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி யு சிங், பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று சட்டம் இயற்றப்படுவதால், உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மாநிலங்களின் கருத்தை ஏற்காமல்,எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இந்த சட்டம், அரசியல்சாசனப்படி செல்லுபடியாகுமா என விசாரிக்க ஒப்பு கொண்டதுடன், உ.பி., மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE