சினிமா ரொம்ப முக்கியமா?
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய கொரோனா வைரஸ், உலகை மிரட்டும் வேளையில், தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க, தியேட்டர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.சினிமா துறையினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 50 சதவீதம் பார்வையாளர்களோடு இயங்க தியேட்டருக்கு, இதுவரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நடிகர் விஜய், நேரில் சென்று, முதல்வர் இ.பி.எஸ்.சை சந்தித்ததும், 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர் இயங்க, அனுமதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஏனென்றால் அவர் நடித்த படம், பொங்கலுக்கு வெளியாகிறதாம். ஒரு நடிகர், அவர் நடித்த படம் நஷ்டமடையக் கூடாது என கருதுகிறார்; முதல்வரும், அனுமதி வழங்குகிறார்.தட்டிக்கேட்க முடியாத மக்களுக்கு, வீரியமிக்க கொரோனா தாக்கினால் நமக்கென்ன என்ற அலட்சியம் தானே அவர்களுக்கு!நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருப்போர் பெரும்பாலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களே. அவர்கள் படிப்பதற்கு கல்வி நிலையத்தை திறக்க, எத்தனை இடையூறு ஏற்பட்டன. இன்னும் அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக திறக்கப்படவில்லை.ஆனால், அவர்களுக்கு மிகவும், 'அத்தியாவசிய' தேவையான தியேட்டரை, முழுமையாக செயல்பட அனுமதித்து விட்டனர்.அவர்களுக்கு கொரோனா வந்தால் என்ன? அந்த மாணவரின் குடும்பம் பாதிக்கப்பட்டால், அந்த நடிகருக்கும், முதல்வருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.விஜயின் ரசிகர்கள், பொங்கல் ரிலீஸ் படத்தைப் பார்க்க முண்டியடித்து, தியேட்டருக்கு நுழைவர்.
முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி என, அனைத்தும் காற்றில் பறக்கும்.இவ்வாறு பள்ளிப் பிள்ளைகள், மூடிய தியேட்டருக்குள், மூன்று மணி நேரம் இடைவிடாது இருக்கக்கூடிய நிலையில், தொற்று அபாயம் ஏற்படாதா என்ன?கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற அனைத்து சாத்தியக் கூறுகளும், கல்வி நிலையங்களில் உண்டு. தியேட்டரில் சாத்தியமா?கல்வியை விட, பொழுதுபோக்கு ஊடகமான சினிமாவிற்கு, இந்த அரசு முக்கியத்துவம் கொடுப்பது, வேதனை அளிக்கிறது.
கொரோனா காலத்தில் மக்கள், சினிமா தியேட்டரை மறந்து விட்டனர். 'தியேட்டரை திறங்கள்' என, எவரும் போராடவில்லை. ஏனெனில் சினிமா என்பது, மக்களின் அத்தியாவசிய தேவை அல்ல.எனவே, இன்னும் சில காலங்களுக்கு, 50 சதவீத இருக்கைக்கான அனுமதியே சிறந்ததாக இருக்க முடியும்.
நல்ல தலைவராக உருவாவோம்!
வெ.ஜெயலட்சுமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசியலில் இறங்க மாட்டேன்' என்ற, நடிகர் ரஜினியின் முடிவு வரவேற்கத்தக்கது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல, உடல் ஆரோக்கியம் முக்கியமானது.அரசியலுக்கு வந்த பின், ரஜினியின் உடல்நிலையில் மேலும் பின்ன டைவு ஏற்பட்டால், அவரை குறை சொல்வது முறையாகாது. எனவே, அவர் எடுத்த முடிவு, சரியானது.இதற்காக அவர் வீட்டின் முன் தர்ணா, போஸ்டர் எரிப்பது போன்ற செயலில் ஈடுபடுவது, நாகரிகமற்றது.ரஜினி, ஏற்கனவே மரண வாயில் வரை சென்று வந்தவர் என்பதை, இவ்வுலகம் அறியும். தானாகக் கனியாத காயை, தடியால் அடித்து பழமாக்க முடியுமா?
அவர் மீது நல்ல எண்ணம், அன்பு கொண்டவர் செய்யும் செயல், இது தானா? உண்மை நிலையறியாமல், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா? இவை எல்லாம், அவரின் ரசிகர்களுக்கு அழகல்ல.அவரை ஒரு நல்ல ஆலோசகராக ஏற்றுக் கொள்வதே, ஆரோக்கிய அரசியலுக்கு வழிகோலும்.காமராஜர், கக்கன் போல, யாரோ ஒரு தலைவரை ஏன் தேட வேண்டும். நாமே, நல்ல தலைவராக உருவாகக் கூடாதா?'லஞ்சமில்லாத, ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவோம்' என, நாம் உறுதி ஏற்போம். அதை, நம் வீட்டில் இருந்தே செயல்படுத்துவோம்.தரமான கல்வி, குடிநீர், மருத்துவம் கிடைக்க, மக்களாகிய நாம் அகிம்சை வழியில், சட்டத்தின் வழியில் போராட்டக் களத்தில் இறங்குவோம்; நல்ல தீர்வு காண்போம்.
நாம் ஒவ்வொருவரும் ஹீரோ தான்; தலைவர் தான்.
கர்த்தர் இவரையும் மன்னிப்பாரா?
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் நிலவிய மத நல்லிணக்கத்தை, தி.க., மற்றும் தி.மு.க.,வினர் கூறுபோட்டு விற்று வருகின்றனர்.அவர்களை பொறுத்தவரையில், ஹிந்து விரோத செயலில் ஈடுபடுவதும், பிற மதத்தவரோடு இணங்கி இருப்பதும் தான், மதச் சார்பின்மை.தி.மு.க., சமீபத்தில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற, அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள், ஹிந்து மதத்தைப் பற்றி, அநாகரிகமாக பேசினர்.அவர்கள் அனைவரும், தேர்தலில் அதிக, 'சீட்' வாங்க வேண்டும் என்பதற்காக பேசினர்.ஆனால், கிறிஸ்துவ பேராயர் எஸ்ரா சற்குணம், ஹிந்து மதத்தைப் பற்றி அநாகரிகமாக ஏன் பேச வேண்டும்?ஹிந்துக்கள் முகத்தில் ரத்தம் வரும் வரை குத்த வேண்டுமாம். ஏனய்யா? அவர்கள் உனக்கு அப்படி என்ன துரோகம் செய்தனர்?
கிறிஸ்துவர் அனைவரும் நாகரிகமானோர் என, நினைத்துக் கொண்டிருக்கிறோம்; அதில் மண்ணை போட்டிருக்கிறார், எஸ்ரா சற்குணம்.தேவாலயத்தில் பொறுப்பான பதவியில் இருந்து, இறைவனின் போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையுடைய சற்குணம் போன்றோர், துருப்பிடித்துப்போய் கிடப்பது தான், வேதனை தருகிறது.
இது தான், இயேசு கிறிஸ்து, உங்களுக்கு கற்று தந்த போதனையா?'பிறர் மனம் புண்படும்படி ஏசுங்கள்' என, அவர் கூறியுள்ளாரா?'கன்னத்தில் அடித்தவருக்கு, மறு கன்னம் காட்டு' என்ற, தியாக சீலரின் சிந்தனைகளை, அநாகரிகமாக பேசும் நீங்கள், உங்கள் மதத்தினருக்கு எப்படி உபதேசிப்பீர்?
தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கூஜா துாக்குவதற்காக, இயேசு கிறிஸ்துவின் பொன்னான ஆன்மிக கருத்துக்களை எல்லாம், களபலி கொடுத்துவிடாதீர்.கர்த்தரே... தாம் செய்வது இன்னது என்று அறியாமல், பாவம் செய்தோரை மன்னித்த உம் ராஜ்ஜியம், தெரிந்தே பாவம் செய்யும் எஸ்ரா சற்குணம் போன்றவர்களையும் மன்னிக்குமா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE