பெண்கள் தவில் வாசிக்க கூடாதா என்ன!
பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே தவில் வாசிக்கும் நிலையில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில், தந்தையுடன் சேர்ந்து தவில் வாசிப்பது பற்றி சரோஜினி: என் அப்பா சின்னப்பிள்ளை, எங்க ஊர்ல நன்கு அறியப்பட்ட நாதஸ்வர வித்வான். என் அண்ணன் குருமூர்த்தி, தவில் வித்வான். இசை வேளாளர் குடும்பத்தில் அப்பாவும், பையனும் நாதஸ்வரம், தவில் வாசிக்கிறதுல ஆச்சர்யப்படுறதுக்கு
ஒண்ணுமில்லை. ஆனா, பெண்களை தவில் வாசிக்க அனுப்பத் தயங்குவாங்க. அதையெல்லாம் மீறி என்னைத் தவில் வாசிக்க அனுப்பினது தான் பெரிய விஷயம். இப்போ கூட பரவாயில்லை.
பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால, பெண்களுக்கான சூழல் ரொம்ப மோசமா இருந்துச்சு.
சில பெண்கள் நாதஸ்வரம் வாசிச்சாங்க; ஆனா, தவில் வாசிக்கிறதுக்கு யாரும் பெருசா முன்வரலை. தவில் வாசிப்புங்கிறது கிட்டத்தட்ட ஆண்களுக்கு மட்டுமானஒன்றாகவே இருந்துச்சு. அந்தச் சூழல்ல தான், தவில் வாசிக்கத் துவங்கினேன். தவில் கத்துக்க ஆரம்பிக்கும்போது, சொந்தக்காரங்க பலரும், 'பொம்பள புள்ளைக்கு எதுக்கு இதெல்லாம்?'னு எதிர்ப்பு தெரிவிச்சாங்க.சொந்தக்காரங்களை விட்டுத் தள்ளுங்க... என் அம்மாவே, நான் தவில் கத்துக்கிறதை விரும்பலை. ஆனா, என் அப்பா எதையுமே காதுல வாங்கிக்கலை. 'மத்த பொண்ணுங்க யாரும் தவில் வாசிக்கலைங்கிறதுக்காக, என் பொண்ணு தவில் வாசிக்கக்கூடாதா...'ன்னு சொல்லி, எனக்கு தவில் வாசிக்கக் கற்றுக் கொடுத்தார்.ஆர்வத்தோட தவில் கத்துக்க ஆரம்பிச்ச நான், ஒரே வருஷத்துல கச்சேரி செய்யுற அளவுக்கு முன்னேறினேன்; ஆறாம் வகுப்பு படிக்கும்போது அரங்கேற்றம் பண்ணிட்டேன்.
அதன்பிறகு அப்பா, அண்ணா கூட நானும் கச்சேரிக்குப் போக ஆரம்பிச்சேன்.
'சின்ன பொண்ணு என்னம்மா தவில் வாசிக்கிறா பாரு'ன்னு சொல்லிப் பாராட்டுவாங்க. ஸ்கூல் முடிச்சுட்டு இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்த பின்பும், கச்சேரிக்குப் போறதை நான் நிறுத்தலை. லீவு நாள்ல கச்சேரி இருந்தா போயிருவேன். படிப்பு முடிஞ்சதும், அத்தைப் பையன் கூட
கல்யாணம். கல்யாணத்துக்குப் பிறகு, கச்சேரிக்கு அனுப்ப மாட்டாங்களோன்னு உள்ளுக்குள்ள சின்ன பயம் வந்துச்சு. ஆனா, என் கணவர் மணிகண்டன், 'உனக்குப் பிடிச்சதை செய்'னு சொல்லி ஊக்கப்படுத்தினார்.குழந்தை பிறந்ததும் குழந்தையை அம்மா பொறுப்புல விட்டுட்டு, கச்சேரிக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தற்காலிக தவில் கலைஞர் வேலை, அப்பா, அண்ணாவுடன் கச்சேரிகள்னு வாழ்க்கை பரபரப்பா போயிட்டிருக்கு. இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE