வாஷிங்டன்:மும்பையில், 2008ல் தாக்குதல் நடத்திய லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி ஜாகிர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தானில் கைதானதை அமெரிக்கா வரவேற்று உள்ளது.
நம் நாட்டில், மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி ஜாகிர் ரஹ்மான் லக்வியை, சர்வதேச பயங்கரவாதி என, ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவது, இந்தியா உட்பட பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுவது, அவற்றை செயல்படுத்த நிதி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என, சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
இந்நிலையில், மும்பை தாக்குதல் வழக்கில், 2015ல் ஜாமின் பெற்ற ஜாகிர் ரஹ்மான் லக்வியை, பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியதாக பஞ்சாப் மாகாண போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.இந்த நடவடிக்கையை, அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இது குறித்து, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான, அமெரிக்க வெளியுறவு துறை பணியகம் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச பயங்கரவாதத்தை ஆதரிப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளுக்கு நிதியளிக்கும் லக்வியின் கைது நடவடிக்கையை வரவேற்கிறோம். மும்பை தாக்குதல்களுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.அவர் மீதான வழக்கின் விசாரணை மற்றும் தண்டனை ஆகியவற்றை, நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE