சென்னை: ''நல்லாட்சி மலர விடக் கூடாது என்பதற்காக, சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஆன்மிகமும், அரசியலும் வேறு வேறு என்பதை, உணர்ந்தவர்கள் தமிழர்கள்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., சிறுபான்மையினர் அணி சார்பில், 'நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்' என்ற கருத்தரங்கம், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:
தி.மு.க.,விற்கும், முஸ்லிம்களுக்கும் உணர்வு பூர்வமான அன்பும், பாசமும் எப்போதும் உண்டு. இது, தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி. சட்டசபை தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அதனால், தி.மு.க., கூட்டணியில், அதிக தொகுதிகளை கேளுங்கள் என என்னிடம், மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எங்களுக்கு தொகுதிகளை, தாராள மனதுடன், ஸ்டாலின் தருவார். இவ்வாறு, அவர் பேசினார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:சிறுபான்மை இனத்திற்கும், தி.மு.க.,வுக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு. தமிழகத்தில் இன்னும், நான்கு மாதங்களில், தி.மு.க., ஆட்சி அமையும். நல்லாட்சி மலரக் கூடாது என, சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஆன்மிகமும், அரசியலும் வேறு வேறு என்பதை, உணர்ந்தவர்கள் தமிழர்கள்.
தமிழர்களாக ஒன்றுபட, யாருடைய இறை நம்பிக்கையும் தடையாக இல்லை. அரசியலுக்கும், ஆன்மிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை, தமிழக மக்கள் நன்கு அறிவர். பக்தியை சிலர், வியாபார பொருளாக மாற்ற முயற்சிக்கின்றனர். பா.ஜ.,வினரும், அ.தி.மு.க.,வினரும், அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரானவர்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE