சென்னை:திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில், ஜூலை வரையில் உள்ள விழாக்களை, எப்படி நடத்தலாம் என்பது குறித்து, மத தலைவர்களுடன் ஆலோசித்து, அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமிக்கு, விழாக்கள், சடங்குகள் மறுக்கப்பட்டன. ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உற்சவங்களை, ஆகம சாஸ்திரப்படி நடத்துவது குறித்து முடிவு எடுக்க, குழு அமைக்கும்படி உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. 'கோவிலுக்குள் விழாக்கள் நடத்தலாம்; மத விஷயங்களில், அரசு, அறநிலையத் துறை குறுக்கிடக் கூடாது' என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'அரசுக்கு தலையிட உரிமை உள்ளது. மத உரிமையை விட, வாழ்வுரிமை உயர்ந்தது. நோய் தொற்று உள்ள சூழ்நிலையில், மக்களை காக்கும் உரிமை அரசுக்கு உள்ளது' என்றார்.
இதையடுத்து, 'பாரம்பரியமான விழாக்கள் நடப்பதை உறுதி செய்ய, மத தலைவர்களுடன், அரசு ஆலோசிக்க வேண்டும். எப்படி விழாக்கள் நடத்தலாம் என்பதற்கான வழிமுறைகள் காண, முயற்சிக்க வேண்டும். 'ஜூலை வரை, எப்படி விழாக்கள் நடத்தலாம் என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.'மத விழாக்கள், கொண்டாட்டங்களுக்காக, கொரோனா தடுப்பு விதிகளில், எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது' என, தெளிவுபடுத்திய முதல் பெஞ்ச், விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE