கோவில்பாளையம் : 'நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல வருமானம் பெறலாம்' என, இலவச நாட்டுக்கோழி வழங்கும் விழாவில் கால்நடை துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
கூண்டு வழங்காததால் பயனாளிகள் அதிருப்தி தெரிவித்தனர்.தமிழக அரசு, ஏழைகளுக்கு, நாட்டுக்கோழி குஞ்சு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், கோவில்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில், 225 பயனாளிகளுக்கு, நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தேவராஜ் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் அபிநயா முன்னிலை வகித்தார்.
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் இளங்கோ பேசுகையில், ''பயனாளிகளுக்கு, நான்கு வாரங்களான அசில் ரக நாட்டு கோழி குஞ்சுகள் தலா 25 வழங்கப்படுகின்றன. இந்த குஞ்சுகளை நல்ல முறையில் வளர்த்தால் ஆறு மாதத்தில் வருமானம் தரத் துவங்கும். இவற்றில் சிலவற்றை அடை காக்க பயன்படுத்த வேண்டும். கோழி குஞ்சு வளர்ப்புக்கு சிறப்பு பயிற்சி தருகிறோம். பயிற்சி கட்டணமாக 150 ரூபாய் வழங்கப்படுகிறது. நல்ல முறையில் வளர்த்தால், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறலாம்.
''கவனமாக பராமரித்து வளர்க்க வேண்டும். கோழிக்குஞ்சுகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகத்தில் காண்பித்து சிகிச்சை பெறலாம்,'' என்றார்.கால்நடை டாக்டர்கள் மோகன்ராஜ், நித்ய வள்ளி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், பா.ஜ., அமைப்புசாரா அணி மாநில துணைத்தலைவர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.பயனாளிகள் கூறுகையில், 'கோழி குஞ்சு மட்டும் வழங்கியுள்ளனர். இவற்றை வைத்து பராமரிக்க தேவையான கூண்டு வழங்கவில்லை. அதற்கு அதிக செலவு செய்து கூண்டு வாங்க வேண்டியுள்ளது.
வசதியில்லாத நாங்கள் கோழிக்குஞ்சை கூண்டு இல்லாமல் எப்படி வளர்க்க முடியும். திறந்த வெளியில் திரியும் கோழிக்குஞ்சுகள் எளிதில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது. அரசு கூண்டு வழங்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE