உடுமலை : தொடர் மழையால், கொத்தமல்லி செடிகளில், பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் பாதியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், களிமண் சாகுபடி நிலங்களில், மானாவாரியாக பருவமழையை அடிப்படையாக கொண்டு கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. சாகுபடியில், 90 நாட்களுக்குப்பிறகு செடிகள் அறுவடை செய்யப்பட்டு, அதிலிருந்து மல்லி தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தாண்டு, விதைப்பு துவங்கியபோது, விதை மல்லி, கிலோ, 110 ரூபாய் வரை, விற்பனையானது. ஏக்கருக்கு, 8 கிலோ விதை துாவப்படுகிறது.தண்ணீர் பாய்ச்ச தேவையில்லாத நிலையில், களையெடுத்தல் மற்றும் மருந்து மட்டும் தெளிக்கப்படுகிறது. இந்தாண்டு விதைப்பு மேற்கொள்ளப்பட்டதும், சாரல் மழை மட்டும் பெய்தது.
செடிகளின் வளர்ச்சித்தருணத்தில், பனிப்பொழிவு இருந்த நிலையில், பூ விட்டதும், தொடர் மழை பெய்தது. இதனால், பெரும்பாலான பூக்கள் உதிர்ந்ததுடன், தற்போதுள்ள பூக்களிலும், தரமான மல்லி, கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப் படும் மானாவாரி சாகுபடியும் கைவிட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: பூ விட்ட பிறகு, பெய்த மழையால், சாகுபடியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பால், விதைப்பு, களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு செலவிட்ட தொகை கூட கிடைக்காது.
நல்ல மழை கிடைத்தால், ஏக்கருக்கு, 40 கிலோ கொண்ட, 10 மூட்டை விளைச்சல் கிடைக்கும். இந்த சீசனில், 2 மூட்டையே விளைச்சல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், கிடைக்கும் வருவாய், அறுவடை செலவுக்கு கூட கட்டுப்படியாகாது. வேளாண்துறையினர், நேரடி ஆய்வு நடத்தி, நிவாரணம் வழங்க, அரசுக்கு பரிந்துரை அளிக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE