மேட்டுப்பாளையம் : அரசு உத்தரவுபடி நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், பள்ளிகள் திறப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
தமிழக கல்வித்துறை உத்தரவுபடி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நேற்று பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. காரமடை பள்ளியில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், யுவராஜ் பேசுகையில், ''கடந்த, 9 மாதங்களாக பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீடுகளில் நன்கு சாப்பிட்டு, ஓய்வெடுத்து பழகிக் கொண்டனர். பள்ளிகள் திறந்தால், காலையிலிருந்து மதியம் உணவு இடைவேளை விடுவதற்குள், இரண்டு முறை சிறிது நேரம் இடைவெளி விடவேண்டும்,'' என்றார்.காரமடை மைதிலி பேசுகையில், ''பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் ஹோட்டல்கள், கேளிக்கை பூங்காக்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைப் போன்று பள்ளிகளையும், விதிமுறைகளுக்கு உட்பட்டு, அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வகுப்புகளில், மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்வதற்கு, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.மேட்டுப்பாளையம் செல்வராஜ் பேசுகையில், ''தற்போது வீரியம் மிக்க கொரோனா தொற்று பரவுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்வி ஆண்டு முடிவதற்கு, இன்னும், 3 மாதங்களே உள்ளன.
அதனால் இக்கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் இருந்து, பள்ளிகளை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.பள்ளி முதல்வர் சசிகலா பேசுகையில், ''ஒவ்வொரு வகுப்பிலும் சமூக இடைவெளி விட்டு, 25 மாணவர்கள் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படுவர். சளி, காய்ச்சல் இருக்கும் தங்கள் குழந்தைகளை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். பள்ளி நுழைவாயிலில் தெர்மல் ஸ்கேனர் வாயிலாக, உடல் வெப்ப நிலையை கணக்கிட்ட பிறகே, பள்ளியின் உள்ளே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE