பொள்ளாச்சி : ரேஷன் அரிசி கடத்தலின் மையமாக, பொள்ளாச்சி மாறியுள்ளது. கடத்தல்காரர்கள் எவ்வித பதற்றமும், பயமும் இல்லாமல் வாகனங்களில் ரேஷன் அரிசியை சர்வ சுதந்திரமாக கடத்தும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது.
பொள்ளாச்சி அருகே, கேரளா மாநிலம் அமைந்துள்ளது. தமிழக - கேரளா எல்லைப்பகுதியாக கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், செமணாம்பதி, நடுப்புணி, வடக்குக்காடு என பல்வேறு பகுதிகள் உள்ளன.இது தவிர, எல்லையோர கிராமப்புறங்கள் வழியாகவும் கேரளாவுக்கு செல்ல வழித்தடங்கள் உள்ளன. இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தல் காரர்களின் மையமாக, பொள்ளாச்சி பகுதி மாறியுள்ளது.மூட்டை மூட்டையாகரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி, மூட்டை மூட்டையாக கடத்தப்படுகின்றன.
பொதுமக்களிடம் இருந்து, கிலோவுக்கு 10 ரூபாய்க்கு வாங்கிச் சென்று, அந்தந்த கிராமங்களில் கடத்தல்காரர்கள், 'பாயின்ட்'கள் அமைத்து, பதுக்கி வைக்கின்றனர். அதன்பின், 50 கிலோ மூட்டைகளாக கட்டி, மொபட், சொகுசு வாகனங்களில் மளிகை பொருட்கள், காய்கறிகள் அடுக்கி வைத்து, அதன் கீழே ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி கடத்துகின்றனர்.வழித்தடம்பொள்ளாச்சி அருகே, நெடும்பாறை, தாவளம் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகள் தற்போது செயல்பாட்டில் இல்லை. போலீசார் பற்றாக்குறையால், சோதனைச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன.இதனால், கடத்தல்காரர்கள் செடிமுத்துார், நெடும்பாறை வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
கண்காணிப்பு செய்வதற்காக, ஒருவர் 'பைலட்' போன்று வாகனத்துக்கு முன்பாக செல்கிறார். அதிகாரிகள் நடமாட்டம் இல்லையென, 'சிக்னல்' கொடுத்ததும், கடத்தல் வாகனம் செல்கிறது. ஒரு 'டிரிப்'க்கு, 200 கிலோ வீதம் கடத்துகின்றனர். ஒரு நிமிடத்தில், அரிசி மூட்டைகளுடன், 10 வாகனங்கள் கடந்து செல்கின்றனர். தாவளம் பகுதியில் மழைப்பொழிவால் ரோடு மோசமாக உள்தால் தற்போது நெடும்பாறை வழித்தடத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.சர்வ சுதந்திரம்ரேஷன் அரிசி கடத்துபவர்கள் சுதந்திரமாய் வலம் வரத்துவங்கியுள்ளனர். அதிகாரிகள் அனைவருக்கும் மாதம், மாதம் கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்து விட்டுத்தான் கடத்துகிறோம், என, அலட்சியமாக பதில் கூறிச் செல்கின்றனர்.அதிகாரிகள், போலீசார் என அனைவருக்கும் மாமூல் செல்வதால் எவ்வித பதற்றமும் இல்லாமல் கடத்துகின்றனர்.
நெடும்பாறை பகுதியில் எவ்வித பயமும் இல்லாமல் பட்ட பகலில், வாகனங்களில் அரிசி மூட்டைகளில் மாற்றம் செய்து கடத்தப்படுகிறது. கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரிசி கடத்தலை கட்டுப்படுத்தலாம்.'கவனிப்பு' பெறும் போலீஸ்!ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, குடிமைப்பொருள் அதிகாரிகள், உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுத்து, 'டன்' கணக்கில் பிடித்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால், கடத்தலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம், குறுக்கு ரோடுகள் அனைத்து விபரங்களும் தெரிந்தும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 'கவனிப்பு' பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். மற்ற துறையினர் பிடித்து கொடுத்தாலும், கடமைக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர். இந்த பிரிவு போலீசாரை களையெடுத்து, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE