வால்பாறை : வால்பாறையில், ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு பணி, வரும், 13ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் காணப்படுகின்றன.பொங்கல் தினத்தன்று பறவைகளை பார்த்து பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கணக்கெடுப்பு பணி ஆண்டு தோறும் நடக்கிறது. இதனால், பல பொது பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும்.கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியாவில் ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
தமிழக பறவையாளர்கள், 2015ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பொங்கல் நாட்களில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.கடந்த, 2017ம் ஆண்டு ஜனவரி, 15 முதல் 18 வரை நடந்த பறவைகள் கணக்கெடுப்பில், 1,741 பறவைகளின் பட்டியல்கள், 108 பறவை ஆர்வலர்களால் கண்டறியப்பட்டது. அதிகமாக பதிவு செய்யப்பட்ட பறவைகளில் முதல் பத்து இடத்தில் காகம், மைனா, கரிச்சான்குருவி, அண்டங்காக்கை, பச்சைக்கிளி, மடையான், வெண்மார்பு மீன் கொத்தி, பனைஉழவரன், மணிப்புறா ஆகிய பறவைகள் இடம் பெற்றுள்ளன.
வால்பாறையில் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள, சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வகணேஷ் கூறியதாவது:மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில், எண்ணற்ற பறவைகள் உள்ளன. இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி, வரும், 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பறவை ஆர்வலர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். பறவைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதை பாதுகாக்கும் வகையிலும், ஆண்டு தோறும் இந்த கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இவ்வாறு, ஆசிரியர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE