பெ.நா.பாளையம் : பறவைக்காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைகட்டியில், சோதனைச் சாவடி அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் பரவிய பறவை காய்ச்சலால், 1,500 வாத்துகள் பலியாகின. குட்டநாடு பகுதியிலும் சில பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும், பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதை மாநில பேரிடராக அறிவித்து, கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லையில் உள்ள ஆனைகட்டி பகுதியில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு தடுப்புப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆனைகட்டி பஸ் ஸ்டாண்டில் இதற்காக சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து ஆனைகட்டி வழியாக வரும் வாகனங்கள் மீது, கிருமிநாசினி தெளிக்கப் பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றன. அங்குள்ள சோதனை சாவடியில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர் இரண்டு பேர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் இரண்டு பேர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மருத்துவர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் பணியில் காலை முதல் மாலை வரை ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்திலிருந்து கறிக்கோழிகள், முட்டைகள், கோழி குஞ்சுகள், கோழி உரங்கள் ஆகியவை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து செல்லும் முட்டைகள், கோழிகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கப் படுகிறது. கோழிகள் ஏற்றிச் சென்று திரும்பும் வாகனங்களை, முழுமையாக கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின்பே, கோவைக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து வரும் மற்ற வாகனங்களிலும், கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE